90 முறை ஆட்சியைக் கலைத்து சாதனை படைத்தது காங்கிரஸ்: மோடி காட்டம்!

90 முறை ஆட்சியைக் கலைத்து சாதனை படைத்தது காங்கிரஸ்: மோடி காட்டம்!

அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தகோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை கூறிவருகிறார்.

மக்களவையில் கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஊழலும் வன்முறையும் தலைவிரித்தாடியதாக குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, மாநிலங்களவையில் பேசும்போதும் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தார்.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலங்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், இவர்கள் ஆட்சி செய்தபோது என்ன நடந்தது? 90 முறை இவர்கள் மாநிலங்களை கலைத்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த ஒருவர் அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவை காரணம் காட்டி 50 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்துள்ளார். அவர் யார் தெரியுமா? இந்திரா காந்திதான்.

நாங்கள் நேருவின் பெயரை சொல்ல மறந்துவிட்டால் அவர்கள் கூச்சல் போடுகிறார்கள். நேரு ஒரு சிறந்த மனிதர்தான். ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள். அவரது பெயரைக்கூட தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள். (ராகுல் காந்தியை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.).

இந்த நாடு எந்த ஒரு குடும்பத்துக்கும் சொந்தமானது அல்ல. எதிர்க்கட்சிகளின் பேச்சும் அவர்கள் நடந்துகொள்ளும் விதமும் அதிருப்தி அளிக்கிறது. நாட்டு மக்கள் அவர்களின் செயலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடந்த 60 ஆண்டுகாலமாக நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது காங்கிரஸ்தான். நம்மைவிட சிறிய நாடுகள் முன்னேறிய போதிலும் நாம் முன்னேறாமல் இருந்ததற்கு அவர்களே காரணம். பிரச்னைகளுக்கு முடிவு காண்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. பிரச்னைகள் தொடர வேண்டும் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.

காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டார்கள். இந்த அரசு முடிவெடுக்கும் அரசாக உள்ளது. அவர்கள் எத்தனை முறை சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்வது உறுதி என்றார் பிரதமர் மோடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com