கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரஸார்!
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஜனவரி மாதம் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் கர்நாடக சட்டப்பேரவை வளாகமான விதான் சவுதாவை "டெட்டால் மற்றும் பசுவின் கோமியத்தால்" சுத்திகரிக்கப்போவதாகக் கூறியிருந்தார்.
அதை உண்மையாக்கவோ என்னவோ ஒரு சில காங்கிரஸ் தொண்டர்கள் விதான் செளதாவைச் சுற்றிச் சென்று கோமியத்தை தெளித்து அதை சுத்திகரிக்கும் செயலை மேற்கொண்டனர். முந்தைய பாஜகவினர் தங்களது ஊழல்களால் விதான் செளதாவை மாசுபடுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அந்த ஊழல் கறைகளை சுத்தம் செய்து அகற்றவே கோமியம் தெளித்தாக அவர்கள் கூறினர். காங்கிரஸின் முக்கியமான தொண்டர்கள் மட்டுமே இந்தச் செயலில் ஈடுபட்டார்களே தவிர முக்கிய அமைச்சரோ அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வோ இந்தச் ‘சடங்கில்’ பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் தொண்டர்களின் இச்செயலை பாஜக நிர்வாகிகள் "மலிவான செயல்" என்று விமர்சித்தனர்.
இச்செயலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முந்தைய பாஜக அரசாங்கம் அரசாங்கத் திட்டங்களை வழங்குவதற்காக "40% கமிஷன்" பெற்றதாகவும் அந்தக் ஊழல் கறை அங்கு நிறைந்திருப்பதாகவும் அதைச் சுத்திகரிக்கவே தாங்கள் இதில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், அவரது பாஜக அரசு உண்மையில் 40% கமிஷன் கட் செய்ததை "ஆதாரங்களுடன் நிரூபிக்க" வேண்டும் என்றார். அத்துடன், “முந்தைய பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் அனைத்து ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், உண்மை வெளியில் வரட்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அவர் பேசுகையில்;
“எனது அரசாங்கம் 40% கமிஷன் எடுத்ததாகக் குற்றம் சாட்டிய மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் கெம்பண்ணாவிடம், ஒப்பந்தக்காரர்களை இப்போது டெண்டர்களில் 40% குறைவாகக் கேட்கச் சொல்ல விரும்புகிறேன். முந்தைய அதே தொகையை அவர்கள் தொடர்ந்து மேற்கோள் காட்டினால், 40% ஊழல் தொடர்ந்தது என்று அர்த்தம். எனவே, கெம்பண்ணாவுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.கெம்பண்ணா இதுவரை நீதிமன்றங்களுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை, ஆனால் [பாஜகவுக்கு எதிராக] பொய்
பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸுக்குப் பலன் கிடைத்தது, எனவே சங்கம் இப்போதாவது ஆதாரங்களைத் தரட்டும். ”
- என்றும் அவர் கூறியிருந்தார்.