காங்கிரஸ் கனவு பலிக்காது, என்னை யாராலும் அசைக்க முடியாது: மோடி!
நான் ஏழைகளின் வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்த உழைத்து வருகிறேன். ஆனால், காங்கிரஸார் என் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்போவதாக கூறி கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. என்னை யாராலும் அசைக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை திறந்துவைத்த பின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “2014 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஏழை மக்கள் பணத்தை கொள்ளையடித்ததே தவிர ஏழைகளின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை.
எனது அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்போவதாக காங்கிரஸார் கூறிவருகின்றனர். அவர்களின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. நான் தொடர்ந்து ஏழைகளின் நலனுக்காக உழைப்பேன். இந்த நாட்டு மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. இது தெரியாமல் காங்கிரஸார் மனம் போன போக்கில் பேசி வருகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் தங்களுக்குரிய நலன்களைப் பெற இங்கும் அங்கும் ஓடி அலைந்தனர். ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் ஏழைகளுக்கான பலன் அவர்களின் வீடுகளைச் சென்றடைகிறது.
நாடு முழுவதும் நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வேலைவாய்ப்பு, முதலீடும் பெருகிவருகின்றன. மக்களுக்கு வருவாய் கிடைக்கிறது.
2022 ஆம் ஆண்டு இந்தியாவில் முதலீடு அதிகரித்தது. இதில் பெரும் பயனடைந்தது கர்நாடகம்தான். கோவிட்-19 தொற்று காலத்தில்கூட கர்நாடகம் ரூ.4 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தது. கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.
உயிரி தொழில்நுட்பம், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, மின்சார வாகனங்கள் என அனைத்து தயாரிப்பு துறையிலும் கர்நாடகம்தான் முன்னிலையில் உள்ளது.
சிலர் (ராகுல் காந்தி) வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இந்தியாவில் ஜனநாயகம் வேரூன்றி பல நூற்றாண்டுகளாகிவிட்டது. உலகமே நமது ஜனநாயக நடைமுறைகளை வியந்து போற்றுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாதான். ஏன் ஜனநாயகத்தின் தாயாக இருப்பது இந்தியாதான். இந்திய ஜனநாயகத்தை எந்த சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாது. ஆனாலும் சிலர் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருவது துரதிருஷ்டமானது என்று பிரதமர் மோடி கூறினார்.
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்
நடத்துவது நீங்கள்தான்! காங்கிரஸ் பதிலடி
ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்துவதால்தான் விவாதங்கள் எழுகின்றன என்று ராகுல் காந்தி மீதான பிரதமரின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி, மூத்த தலைவர்களை அவதூறாக பேசுவதிலேயே காலம் கழித்துவிட்டார். கடந்த 70 ஆண்டுகளாக, அதாவது மூன்று தலைமுறைகளாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சொல்கிறீர்கள். அப்போது நாட்டின் மதிப்பு எங்கே போனது? நாடாளுமன்றத்தில் உங்களை நீங்களே புகழ்ந்து பேசுகிறீர்கள். முதுகை நீங்களே தட்டிக் கொடுக்கிறீர்கள். அதைப் பார்த்து உலகமே சிரிக்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகள் மீது தாக்குதல் நடத்தும்போது நாட்டின் மதிப்பு உங்களுக்கு தெரியவில்லையா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ராகுல்காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில், இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். ஜனநாயகத்தின் மீதான சவால்கள் குறித்து பிரதமர் மோடி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வந்து விளக்கம் தரட்டும் என்றும் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.