காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, ஜின்னாவின் அறிக்கை - அறிக்கையை கொளுத்தி அதிரடி காட்டிய ஈஸ்வரப்பா!

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, ஜின்னாவின் அறிக்கை - அறிக்கையை கொளுத்தி அதிரடி காட்டிய ஈஸ்வரப்பா!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சை நாயகனாக உருவெடுத்திருக்கிறார், ஈஸ்வரப்பா. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என்று குறிப்பிட்டிருப்பதை கடுமையாக விமர்சித்தவர், தேர்தல் அறிக்கை தீயிட்டு கொளுத்தியிருக்கிறார்.

பா.ஜ.கவின் முக்கியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈஸ்வரப்பா தடாலடி பேச்சுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பேர் பெற்றவர். சென்றவாரம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலை நிறுத்துமாறு சொல்லி கண்டனங்களை எதிர்கொண்டவர். தினமும் ஒரு சர்ச்சை, பேட்டி என்று பிரச்சாரத்தை விறுவிறுப்பாக எடுத்துச் செல்லும் ஈஸ்வரப்பாவின் கோபம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பக்கம் திரும்பியிருக்கிறது.

பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பா.ஜ.கவினர் மத்தியிலும் இந்து அமைப்புகள் மத்தியிலும் கடும் கண்டனத்தை எழுப்பியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக செயல்படும் கட்சி என்பதை பிரச்சாரத்தில் பா.ஜ.கவினர் ஹைலைட் செய்து வருகிறார்கள்.

பஜ்ரங் தள அமைப்பை தடை செய்வதாக குறிப்பிட்டுள்ள வாசகத்தை எதிர்த்து பா.ஜ.கவினர் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து இந்து கோவில்களிலும் அனுமன் மந்திரம் ஓதும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். பா.ஜ.கவின் அனைத்து வேட்பாளர்களும் மந்திரம் ஓதும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.

நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஈஸ்வரப்பா தீயிட்டு கொளுத்தினார். பின்னர் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு திரும்ப வந்தால் காங்கிரஸ் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். இந்து மத உணர்வுகளை புண்படுத்தி வரும் வகையில் செயல்படும் காங்கிரஸ் தலைவர்களான டி.கே.சிவக்குமார், சித்தராமையாவை கைது செய்வோம் என்றார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்னும் தேசவிரோத அமைப்பை பா.ஜ.க தடை செய்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பி.எப்.ஐ மீதான 173 வழக்குகளை திரும்பப் பெற்றிருக்கிறது. நாடு முழுவதும் பி.எப்.ஐ தடை செய்யப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கவலைப்பட்டதில்லை. பஜ்ரங் தளத்தை தடை செய்வேம் என்று குறிப்பிட்டிருப்பதால் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும்.

காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது. ராவணன் ஆஞ்சநேயரின் வாலை தீவைத்து எரித்தான். இதுவே ராவணனின் ஆட்சிக்கு முடிவு கட்டியது.

அதேபோல் பஜ்ரங்தளத்தை தொட்டதால் காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்படும். பஜ்ரங்தள அமைப்பு என்பது தேசபக்தி இயக்கம். முகம்மது அலி ஜின்னாவின் அறிக்கை தான், காங்கிரசின் தேர்தல் அறிக்கை. டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் சாதியால் மக்களை பிளவுப்படுத்தி வருகிறார்கள் என்றெல்லாம் அதிரடியா பேசியிருக்கிறார்.

இன்னும் மூன்று நாட்கள் பிரச்சாரம் மீதமுள்ள நிலையில் இன்னும் பல பரபரப்புச் செய்திகளை எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com