வெறுப்பு பேச்சுகளை தூண்டும் அமைப்புகளுக்குத் தடை, இடஒதுக்கீடு 75% ஆக அதிகரிக்கப்படும் கர்நாடக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்!
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்கள் தளம், பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற வெறுப்புப் பேச்சுகளைத் தூண்டும் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும், இடஒதுக்கீடு 75 சதவீதமாக அதிகரிக்கப்படும், வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
கர்நாடகத்தில் மே 10 ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இருவரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், லிங்காயத்து, வொக்கலிக சமூகத்தினர் என அனைத்து சமூகத்தினரையும் திருப்தி படுத்தும் வகையில் இடஒதுக்கீடு தற்போதுள்ள 50 சதவீத்த்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படும்.
வெறுப்பு பேச்சுக்களைத் தூண்டும் அல்லது பரப்பிவரும் தனிநபர் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அவற்றுக்கு தடை விதிக்கப்படும்.
தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக்க் கூறி கடந்த ஆண்டு பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஜ்ரங்தளம் என்ற அமைப்பு விசுவ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவாக செயல்பட்டு வருகிறது. மேலும் பா.ஜ.க.வின் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அமைப்பாகும் இது.
மேலும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு கிருஹ லெட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.1,500 உதவித் தொகையாக வழங்கப்படும். மகளிர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அரசு வேலைவாய்ப்புகள் முழுமையாக நிரப்பப்படும். 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
2004 ஆம் ஆண்டு பிரதமர் வாஜபேயி தலைமையிலான பா.ஜ.க. அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டது. தற்போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்ததால் ஹிமாச்சல் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு, கடந்த திங்கள்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.