காங்கிரஸ் காலாவதியான கட்சி, அதனால் மக்களுக்கு உத்தரவாதம் தரமுடியாது: பிரதமர் மோடி!
காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்ட ஒரு கட்சியாகும். அக்கட்சியால் மக்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் கர்நாடக தேர்தலில் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
சிலர் இலவசங்களை வழங்குவதாக்க் கூறி உங்களை முட்டாளாக்க பார்ப்பார்கள். இளைஞர்களாகிய நீங்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தையும் அடுத்த தலைமுறையினரின் வருங்காலத்தையும் எண்ணிப்பார்த்து இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல் மற்றும் ராஜஸ்தானில் மக்கள் இன்னும் காங்கிரஸ் கட்சி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காங்கிரஸ் என்றாலே பொய்யான வாக்குறுதிகள். காங்கிரஸ் என்றாலே ஊழல், காங்கிரஸ் என்றாலே வாரிசு அரசியல்தான். காங்கிரஸ் காலாவதி ஆகிவிட்ட ஒரு அரசியல்கட்சி. அதனால் இனி மக்களுக்கு எந்த உத்தரவாதமோ அல்லது உறுதிமொழியோ வழங்க முடியாது என்றார் பிரதமர் மோடி.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும், வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக மக்களிடம்கூறி அதன் மூலம் ஆதாயம் பெற்று ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைக்கின்றனர். அதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ அல்லது எதிர்கால தலைமுறையினரை பற்றியோ கவலை இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக இலவசங்களை அறிவிப்பதால் மாநிலத்தின் கடன்சுமைதான் அதிகரிக்கிறது. இது நல்லதல்ல என்றார் பிரதமர் மோடி.
நாட்டை ஆளும் அரசு தற்போதைய சூழ்நிலையை மட்டுமல்ல எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுதான் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
சவால்களை சமாளிப்பதிலும், ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்வதிலும் அரசு கருத்துடன் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, கோவிட் காலத்தில் மக்களுக்கு இலவச தடுப்பூசி போடும் நடவடிக்கையை எடுத்ததை சுட்டிக்காட்டினார். மக்கள் உயிர்களை காக்கவேண்டும் என்பதால்தான் இலவச தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர் கூறினார்.