கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி!

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி!

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் இதுவரை 136 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பா.ஜ.க. 64 இடங்களில் முன்னிலையில் உள்ளது என்றாலும் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. கிங் மேக்கராக கருதப்பட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எதிர்பார்த்த இடங்களுக்கும் குறைவாக 20 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கர்நாடகத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. பா.ஜ.க., காங்கிரஸ் 224 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 209 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பிரசாரம் செய்துவந்தன.

பா.ஜ.க.வுக்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எடியூரப்பா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி மட்டும் 21 முறை கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் செய்தார். மேலும் 36 கி.மீ. சாலைவழி ஊர்வலத்திலும் பங்கேற்று பிரசாரம் செய்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி. கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மாநிலத் தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தன. ஒருசில கருத்துக்கணிப்புகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலைதான் நீடிக்கும். ஆட்சியமைப்பது யார் என்பதை கிங் மேக்கரான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிதான் தீர்மானிக்கும் என்று தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் 13 ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியிடப்பட்டன. மாலை 4 மணி நேர நிலவரப்படி காங்கிரஸ் 136 தொகுதிகளிலும், பா.ஜ.க. 64 தொகுதிகளிலும், மத்ச்சார்பற்ற ஜனதாத தளம் கட்சி 20 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. மாநிலத்தில் ஆட்சியமைக்க ஒரு அரசியல் கட்சி 113 இடங்களுக்கு மேல் வென்றிருக்க வேண்டும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 138 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பலம், தலைவர்களின் ஒருங்கிணைப்பு, ராகுல், பிரியங்கா, சோனியாவின் பிரசாரம், பா.ஜ.க. மீதான மக்களின் வெறுப்பு ஆகியவையே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பை தேடித்தந்துள்ளது. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதும் பா.ஜ.க.வின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.இதனிடையே காங்கிரஸ் கட்சியின் உழைப்புக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிக்கு ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரையும் ஒரு முக்கிய காரணம். யாத்திரைக்கு கிடைத்த வெற்றியால் தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றினார்கள். அதனால்தான் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றிபெற முடிந்தது. மாநிலத்தின் முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இது முதல் படியாகும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.

"பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தும் தேர்தலில் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. பா.ஜ.க.வின் தோல்வியை ஒப்புக் கொள்கிறோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து தவறுகளை திருத்திக் கொள்வோம்" என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கிங் மேக்கர் என கருதப்பட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 20 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த நிலையில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அக்கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com