வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது: பிரதமர் மோடி!
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வருகிற 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் மே 8 ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில், பெல்லாரியில் ஒரு பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் வாக்குவங்கி அரசியலுக்காக பயங்கரவாத்த்தை மறைமுகமாக ஆதரித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். இதன் காரணமாகவே பயங்கரவாதத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் “கேரள ஸ்டோரி” திரைப்படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பா.ஜ.க. பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் அதை ஒடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாதத்தை உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன. பயங்கரவாதச் செயல்களால் நாம் கடந்த காலங்களில் வெகுவாக பாதிக்கப்பட்டோம். பயங்கரவாதம் மனிதகுலத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் எதிரானது. ஆனால், காங்கிரஸ் மட்டும் வாக்கு வங்கிக்காக மறைமுகமாக பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு கட்சியால் கர்நாடக மக்களை எப்படி பாதுகாக்க முடியும்? எனவே நாம் காங்கிரஸ் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் அரசியல் விளையாட்டை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு மக்கள் வாக்களித்தால் அது பலவீனமான அரசுக்கு அளிக்கும் வாக்காகிவிடும். அவர்களால் நிலையான அரசை தரமுடியாது.
கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை 40% கமிஷன் அரசு என்று காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், 85% கமிஷன் பெறும் கட்சி காங்கிரஸ் என்பதை நீணடகாலத்து முன்பே ஒப்புக் கொண்டுவிட்டது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும்போது ஒரு முறை மத்திய அரசு மக்களுக்காக ரூ.1 செலவிட்டால் அதில் 15 காசுகள்தான் அவர்களைச் சென்றடைகிறது என்று கூறினார். அதாவது காங்கிரஸ் 85% கமிஷன் பெறும் கட்சி என்பதை அவர் அப்போதே மறைமுகமாக ஒப்புக்கொண்டுவிட்டார்.
காங்கிரஸ் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் பொய்களின் மூட்டை. மக்களை சமாதானப்படுத்தும் முறையில் அளிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதனிடையே பிரதமரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. முரளீதரன் பதிலடி கொடுத்துள்ளார். பயங்கரவாதத்தை காங்கிரஸ் ஆரம்பநாள் முதலே எதிர்த்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வகுப்புவாத சக்திகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
வாக்குவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் பயங்கரவாத்த்தை ஆதரிப்பதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், நாங்கள் சிறுபான்மையினர் நலன்களுக்காகவும் அவர்களது உரிமைகளைப் பெற்றுத்ருவதற்காகவுமே அவர்களை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.