ராகுல்காந்தி 3 ஆண்டுகள் சாதாரண பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் அனுமதி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் வழக்கமாக வழங்கப்படும் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) பெற தில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ராகுல்கந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாஸ்போர்ட்டை அவர் திரும்ப ஒப்படைத்துவிட்டார். இதைத் தொடர்ந்து தமக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க்க் கோரி அவர் தில்லி நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
இந்த நிலையில் அவரது கோரிக்கை மனுவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதி, அவருக்கு 10 ஆண்டுகளுக்கான பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடமுடியாது. ஆனால், 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் சாதாரண பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடுவதாக கூறினார்.
பா.ஜ.க. பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி, நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியின் மீது குற்றஞ்சாட்டியிருப்பதால் அவர், பாஸ்போர்ட் அனுமதி கேட்டு நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது.
பாஸ்போர்ட் வழங்குவதற்கு ராகுல் தடையில்லா சான்று கேட்டிருந்ததால் அது பற்றி வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு சுவாமியிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.
கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரே வைபவ் மேத்தா, “வெளிநாடு பயணம் என்பது ஒருவரது அடிப்படை உரிமை. எனவே காங்கிரஸ் தலைவர் வெளிநாடு செல்ல எந்த கட்டுப்பாடும் இல்லை. ஏனெனில் அவர் பலமுறை வெளிநாடு சென்று வந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியபோது அவரது வெளிநாட்டு பயணத்துக்கு தடை விதிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது” என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு பேசியதான வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அவரிடமிருந்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி போட்டுள்ள கிரிமினல் வழக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.