தர்மயுத்தம், கடந்து வந்த பாதை! ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் - இரண்டாம் பாகம்!
சசிகலாவை எதிர்க்கிறீர்களா என்று ஓ.பி.எஸ்ஸிடம் கேட்டபோது, ஆம் என்று ஒப்புக்கொண்டார். ஆட்சியில் சசிகலாவின் தலையீடு இருந்ததை ஓ.பி.எஸ் ரசிக்கவில்லை.
'அரசியலில் எந்தப் பதவிக்கும் வரமாட்டேன் என்று அம்மாவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு கட்சிக்குள் வந்தவர் சசிகலா. தனது குடும்பத்தினர் அம்மாவுக்குத் துரோகம் செய்துவிட்டார்கள் என்பதையும் ஒப்புக்கொண்டிருந்தார்’.
‘சசிகலா முதலமைச்சர் பதவிக்கு எப்படி தகுதியானவராக இருக்க முடியும்? தனது குடும்பத்தினர் துரோகம் செய்தவர்கள்தான் என்பதை சசிகலாவே ஒப்புக்கொண்டார். இத்தகைய துரோக சக்திகளிடம் ஆட்சியும் கட்சியும் போகலாமா?' என்று பேசினார், ஓ.பி.எஸ்.
ஆட்சிக்கு ஓ.பி.எஸ், கட்சிக்கு சசிகலா என்று ஒரு வழியாக ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க செட்டிலாகிவிடும் என்றுதான் அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்தன. இரண்டு மாதங்கள் அப்படித்தான் கடந்தன. ஆனால், இரு தரப்பிற்கும் நடுவே சுமூகமான உறவு ஆரம்பம் முதலே இல்லை.
ஓ.பி.எஸ் மீது சசிகலா தரப்பிற்கும் நம்பிக்கையில்லை. ஓ.பி.எஸ் மத்தியில் இருந்த பா.ஜ.கவுடனும், எதிர்க்கட்சியாக இருநத தி.மு.கவினருடனும் வழக்கத்திற்கு மாறாக நெருக்கம் காட்டினார். இது சசிகலா தரப்பை குழப்பியது. முதல்வராக இருந்த ஓ.பி.எஸ், அதற்கேற்றபடிதான் பொதுவெளியிலும் நடந்து கொண்டார்.
ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றம் வரும்போதெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. அ.திமு.க எம்.எல்.ஏக்கள் முதல் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட மேஜையை தட்டி உற்சாகமாக வரவேற்பார்கள். உள்ளே வந்தால் அ.திமு.கவினரோடு தி.மு.க-வினரும் சேர்ந்து எழுந்து நிற்பார்கள்.
சட்டமன்றத்திற்குள் ஜெயலலிதா வந்து அமரும்போது, சபாநாயகரை மட்டும் வணங்கி அமர்வார். ஆனால், ஓ.பி.எஸ்-ஸோ வணங்கிய கையோடுதான் உள்ளே வருவார். எதிர்க்கட்சியினர் எல்லோரையும் திரும்பிப் பார்த்து வணக்கம் வைப்பார். ஜெயலலிதாவோ சட்டமன்றத்தில் சில மணி நேரங்கள் மட்டுமே இருப்பார். ஓ.பி.எஸ் நாள் முழுவதும் இருந்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி யார் வேண்டுமானாலும் பேசக்கூடிய நிலை சட்டமன்றத்தில் இருந்தது.
தி.மு.கவை எதிரிக்காட்சியாக பார்க்காத ஒரு அ.தி.மு.க முதல்வர் வந்திருப்பதாக தி.மு.கவினர் நினைத்தார்கள். ஓ.பி.எஸ்ஸின் அணுகுமுறையை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருநத ஸ்டாலின் கூட புகழ்ந்து பேசியிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து பொருமிக்கொண்டிருந்தது, சசிகலா தரப்பு.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பி.எஸ் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. ஜல்லிக்கட்டு பிரச்னையை திறமையாக கையாண்டார். தீர்க்க முடியாமல் திணறிய பிரச்னை நிறைய இருந்தன. ஆனால், பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டார். அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் உள்வாங்கிக் கொண்டார்.
அரசியலுக்கு வந்த இளைய தலைமுறையினர் மத்தியில் ஆராதிக்கப்பட்டார். அவர் சசிகலாவுக்கு துணை நிற்பதைத்தான் பலர் கிண்டலடித்தார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அது வெளிப்படையாக தெரிந்தது. அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் அவருக்கு பெரிய அனுதாபம் இருந்தது. ஆனால், சசிகலாவை அவர் எதிர்க்க ஆரம்பித்ததும், கட்சியைத் தாண்டி அவருக்கு ஆதரவு குவிய ஆரம்பித்தது.