தர்மயுத்தம் 2.0 - இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளருக்கு மரியாதை இல்லை - அடுத்த கட்ட மோதலை ஆரம்பித்த ஓ.பி.எஸ்!

தர்மயுத்தம் 2.0 - இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளருக்கு மரியாதை இல்லை - அடுத்த கட்ட மோதலை ஆரம்பித்த ஓ.பி.எஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் கூட இன்னும் ஓயவில்லை. அதற்குள் உள்கட்சி பிரச்னையில் அடுத்த கட்ட மோதலை ஆரம்பித்து வைத்திருக்கிறார், ஓ. பன்னீர் செல்வம். சென்னையில் நேற்று தனியார் ஓட்டலில் நடைபெற்ற தன்னுடைய ஆதரவாளர்கள் கூட்டத்தில் தர்மயுத்தத்தை தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் நடத்தி தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தோம். இரட்டைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க சிறப்பாக செயல்பட்டு வந்தது. வெற்றிகரமாக ஆட்சியை நிறைவு செய்தோம். கூட்டுத் தலைமையாக செயல்பட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றினோம்.

ஆனால், கட்சியின் சட்ட விதிகளுக்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. எம்.ஜி.ஆர் பாணியில் நீதிக்கு தலைவணங்கியிருக்கிறோம். எம்.ஜி,ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்குகிறோம் என்று பேசினார்.

ஒரு சாதாரண தொண்டனை முதல்வராக்குவதுதான் லட்சியம். இரட்டை இலை சின்னத்திற்காகவே வேட்பாளரை வாபஸ் பெற்றோம். ஓட்டு கேட்டு செல்லுமிடங்களில் அ.தி.மு.க வேட்பாளருக்கு உரிய மரியாதை இல்லை என்பதை கேள்விப்படுகிறோம். தேர்தல் முடிவு வெளியாகும்போது தெளிவு பிறக்கும் என்றும் பேசியிருக்கிறார்.

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை வந்த பின்னர் இரண்டு தரப்பாக பிரிந்து நின்று நிர்வாகிகளை நீக்குவதும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதுமான அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. தேர்தல் ஆணையத்தை தவிர்த்துவிட்டு ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் இருவருமே நீதிமன்றத்தை நாடினார்கள்.

நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு எடப்பாடிக்குச் சாதகமாக வந்தபோது ஓ,பி.எஸ் அமைதியாக இருந்தார். கட்சியின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்து நிர்வாகிகள் நியமனத்தை மீண்டும் தொடங்கினார். மாவட்ட ரீதியாக தன்னுடைய அணியை பலப்படுத்தும் பணியில் இறங்கினார்.

தமிழகம் முழுவதும் கட்சிரீதியாக 88 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அவைத்தலைவர், இணைச் செயலாளர்கள், பொருளாளர், இளைஞரணி, மாணவரணி, வர்த்தக அணி என அனைத்துப் பொறுப்புகளுக்கும் ஓ,பி.எஸ் நிர்வாகிகளை நியமித்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததும் நிர்வாகிகள் நியமனத்தை வேகப்படுத்தி, விரைவில் பொதுக்குழு, செயற்குழுவையும் கூட்டி நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் முறையிட முடிவு செய்திருக்கிறார்கள் என்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.

ஆக மொத்தம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதோ, இரட்டை இலைக்கு ஆதரவாக அறிக்கை விடுவதோ ஓ,பி.எஸ் திட்டத்தில் இல்லை. இடைத்தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், எடப்பாணி அணியினரை குறை கூறிவிட்டு வழக்கம்போல் அதிகாரப் போட்டியை ஆரம்பித்துவிடுவார் என்கிறார்கள். வேறு வழி?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com