அரசியல் கூட்ட நெரிசல்களில் ஏற்படும் மரணங்கள்!! சோதனை மேல் சோதனை!!

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

2024 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதிலிருந்து தயாராகிவரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடக்கமே சோதனை மேல் சோதனையாக அமைந்துள்ளது.

அப்படி என்ன சோதனை என்கிறீர்களா? கடந்த ஒருவாரத்திற்குள் இரண்டு இடங்களில் நடந்த அவரது பொதுக் கூட்டங்களில் பங்கேற்றவர்களில் 11 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வருவதை முன்னிட்டு தெலுங்குதேசம் கட்சியினர் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் தொண்டர்களிடம் விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினார். அப்போதுதான் இந்த துயரச் சம்பவம் நடந்தது.

அறுவடைத் திருநாளாம், சங்கராந்தியை முன்னிட்டு ஏழை பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்படும் என்று சந்திரபாபு சார்பில் தெலுங்குதேசம் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து இலவச சேலைகளைப் பெற அந்த இடத்தில் 4,000 பேருக்கு மேல் கூடினர். பெருமளவு கூட்டம் கூடியதால் அந்த இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மற்றொரு பக்கம் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. வரிசையாக நின்றிருந்த மக்கள் திடீரென தடைகளை அகற்றிவிட்டு இலவச சேலை பெறுவதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

“அரசியல் தலைவர் கூட்டம் என்பதால் நாங்கள் 200-க்கும் மேலான போலீஸாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தியிருந்தோம். ஆனால், இலவசங்களைப் பெற மக்கள் முண்டியடித்துச் சென்றதுதான் இச்சம்பவத்துக்கு காரணம்” என்று மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

துரதிருஷ்டமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (டிச. 28) நெல்லூர் மாவட்டம் கண்டுகரில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில், கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைக் காண திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த விபத்தை அடுத்து நாயுடு, பேரணியை ரத்துச் செய்துவிட்டு திரும்பினார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த துயரச் சம்பவம் நடந்த பிறகும்கூட சந்திரபாபு நாயுடு தொடர்ந்து அரசியல்கூட்டங்கள் நடத்தி வருவது கடும் விமர்சனத்திக்குள்ளாகியிருக்கிறது.

தெலுங்கு தேசம் கட்சியின் சங்கராந்தி பரிசுப் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனர். இவற்றை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் சோர்வடைந்தனர். பரிசுப் பொருளை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் முண்டியத்து சென்றதே விபத்துக்கு காரணம் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த சம்பவத்துக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுதான் முழுக்காரணம். அவரது விளம்பர மோகத்தால் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இதற்காக அவர் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அரசியல் பேரணிகளையும், பொதுக் கூட்டங்களையும் சந்திரபாபு நாயுடு நடத்தி வருவது ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019 தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிடம் தெலுங்கு தேசம் படுதோல்வி அடைந்தது. இப்போது நாயுடுவின் பொதுக் கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் அதிகம் வருவது, அக்கட்சி மீண்டும் அரசியலில் எழுச்சிபெற தொடங்கிவிட்டதோ என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

2024 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தாவிட்டால் அதுதான் எனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு கூறிவருகிறார்.

இதனிடையே சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், இளைஞர் அணித் தொண்டர்களுடன் வருகிற 27 ஆம் தேதி 4,000 கி.மீ., 400 நாட்கள் கொண்ட நடைப்பயணத்தை தொடங்கவிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com