டெல்லி மதுபான ஊழல் வழக்கு - துணை முதல்வர் கைதைத் தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலுக்கு சம்மன்!

டெல்லி மதுபான ஊழல் வழக்கு - துணை முதல்வர் கைதைத் தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலுக்கு சம்மன்!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்திருப்பதால் டெல்லி அரசியல் வட்டாரம் பரபரப்பாக்கியிருக்கிறது. ஏற்கனவே டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதான விசாரணை தொடர்ந்து நடந்துவரும் நிலையில், தற்போது அரவிந்த் கேஜ்வரிவால் பக்கம் கவனம் திரும்பியிருக்கிறது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. சென்ற மாதம் கைது செய்தது. மத்திய பா.ஜ.க அரசுக்கு உள்நோக்கம் இருப்பதாகவும் திட்டமிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு அழுத்தம் தரப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.

ஒருவேளை மணீஷ் சிசோடியா, பா.ஜனதாவில் சேர்வதாக ஒப்புக்கொண்டால் நாளையே சி.பி.ஐ பிடியிலிருந்து விடுதலையாகி விடுவார் என்று கெஜ்ரிவால் கிண்டலடித்திருந்தார். அது அரசியல் கிண்டல் என்றாலும் அரவிந்த் கெஜ்ரிவால் பதட்டத்தில் இருந்தது என்னவோ உண்மை.

எந்நேரமும் சி.பி.ஐ குழு, கெஜ்ரிவாலை தேடி வரும் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது அழைப்பு வந்திருக்கிறது. மதுபான கொள்கை ஊழல் வழக்கு கடந்த ஆறு மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அமலுக்கு வந்த புதிய கலால் வரிக் கொள்கையால் தனியார் மது விற்பனையாளர்களுக்கு சாதகமாக கெஜ்ரிவால் அரசு செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த காரணத்தால், ஆளுநரால் சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. சோதனை மேற்கொண்டது.

ஊழல் வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ தவிர அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டது. புதிய கொள்கையை அமல்படுத்துவது குறித்து கெஜ்ரிவால் வீட்டுக்கு பிபவ் குமார் சென்று இருந்தாரா என்று கேள்வி எழுப்பி இருந்தது. பிபவ் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமாக பெற்றதாகவும், செல்போன்களில் இடம்பெற்ற தகவல்களை அழித்து, மாற்றியும் வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இது தொடர்பாக டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்தது. ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி, பஞ்சாப் வெற்றிகளுக்கு மணிஷ் சிசோடியா முக்கிய பங்கு வகித்திருக்கிறார். இந்நிலையில் ஊழல் வழக்கில் அவரை கைது செய்தது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

பா.ஜ.கவை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஒத்துழைக்காத நிலையில் ஆம் ஆத்மி தவித்து வருகிறது. தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் சி.பி.ஐ வளையத்தில் சிக்கியிருப்பதால் ஆம் ஆத்மி கட்சியின் நிலை சிக்கலாகியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com