டெல்லி மதுபான ஊழல், தெலுங்கானாவில் ஏற்படுத்திய புயல் - கவிதா உண்ணாவிரதம் இருந்த காரணம் என்ன?

டெல்லி மதுபான ஊழல், தெலுங்கானாவில் ஏற்படுத்திய புயல் - கவிதா உண்ணாவிரதம் இருந்த காரணம் என்ன?

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கின் புயல், டெல்லியைத் தாண்டி தெலுங்கானா வரை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சி.பி.ஐ விசாரணை மணிக்கணக்காக தொடர்வதால் இன்னும் புயல் கரையை கடக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

தெலுங்கானா மாநில முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, ஒரு வழிய சி.பி. ஐ விசாரணைக்கு வந்து சேர்ந்தார். சி.பி.ஐ மணிக்கணக்காக துருவித் துருவி விசாரணை நடத்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கவிதா, தன்னுடைய தந்தையாரின் கட்சியில் எம்.எல்.சி.யாக இருக்கிறார். மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அவரும் அவருக்கு நெருக்கமான சிலரும் 'சவுத் குரூப்' என்றொரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்து, அதன் மூலம் அதிக சலுகைகளை பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

முதல் கட்டமாக டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து ஏறக்குறைய 12 பேரையும் கைது செய்து விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சி.பி.ஐ, கவிதாவை நெருங்கியது.

கவிதாவின் தொடர்பை கைது செய்யப்பட்ட இருவர் வாக்குமூலமாக அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், கவிதாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வருமாறு கவுதாவுக்கு சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் டெல்லி ஜன்த்ர் மந்தர் பகுதியில் பி.ஆர்.எஸ் கட்சி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது. தலைமை, வேறு யார்? கவிதாதான். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பதால் அதை உடனே நிறைவேற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்தார்.

உண்ணாவிரத நிகழ்ச்சி இருப்பதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு வர கவிதா மறுத்துவிட்டார். உண்ணாவிரத ஐடியா, கவிதாவை கைவிடவில்லை. தேசிய அளவில் கவிதாவுக்கு பெரிய அளவில் கவனம் கிடைத்தது.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் வேலையாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவேண்டும் என்று உண்ணாவிரத கூட்டத்தில் பேசினார். காங்கிரஸ் கட்சி. திரிணமுல் காங்கிரஸ் கட்சி என இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், 9 எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு கவிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யச்சூரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்தார். ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இதில் வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சமாஜ்வாதி கட்சி அதை எதிர்த்து வெளிநடப்பு செய்திருந்தது. காலத்தின் கோலம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com