தமிழக தலைவர்களின் டெல்லி பயணம் - ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் டெல்லியில் யாருடன் சந்திப்பு?

தமிழக தலைவர்களின் டெல்லி பயணம் - ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் டெல்லியில் யாருடன் சந்திப்பு?

முதல்வர், ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர் என அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் டெல்லி பயணம் மேற்கொள்வதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆளுநரும் முதல்வரும் அரசுமுறைப் பயணமாக டெல்லி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அரசியல் ரீதியான சந்திப்புகள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்னும் கேள்வி எழுகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இது அவரது தனிப்பட்ட பயணம் என்று ஆளுநர் மாளிகை அறிவித்திருக்கிறது. டெல்லியில் யாரை, எப்போது சந்திக்கிறார் என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அடுத்து வரும் மூன்று நாட்கள் ஆளுநர் டெல்லியில் தங்கியிருப்பதார் என்றும், வெள்ளி இரவு சென்னை திரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை இரவு டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் தலைவர் உள்ளிட்டவர்களையும் மத்திய அரசின் அமைச்சர்களையும் சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் உடனான சந்திப்பில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் ஒருநாள் தங்கியிருக்கும் முதல்வர் மறுநாள் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்போது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர்கள் மசோதா குறித்து தங்களுடைய கருத்தை தெரிவிக்கவேண்டும். மசோதா ஏற்கப்படுகிறதா அல்லது அது குறித்து சந்தேகங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆளுநர் மாளிகை தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் முதல்வர் பேசுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆளுநர், முதல்வர் இருவரது டெல்லி பயணங்களும் அரசுமுறைப் பயணங்களாகவே இருக்கும் என்றும், அரசியல் ரீதியான சந்திப்புகளுக்கு வாய்ப்பில்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே விழுந்துள்ள விரிசலை சரி செய்யும் முயற்சியை ஏதாவது ஒரு தரப்பு முன்னெடுத்தாக வேண்டும். அதற்கு டெல்லி பயணம் உதவி செய்யுமா என்பதையும் பார்க்கவேண்டும்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லிக்கு பயணம் செல்லவிருப்பதுதான் அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் டெல்லி பயணங்களை எடப்பாடி தவிர்த்தே வந்திருக்கிறார். ஒருமுறை டெல்லிக்கு சென்று பா.ஜ.க தலைவர்களை சந்திக்க முடியாமல் திரும்பியதாகவும் கூறப்பட்டது.

அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு இம்முறை டெல்லி பயணம் வித்தியாசமானதாக இருக்கும். அ.தி.மு.கவுடன் கூட்டணி தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

அறிவித்துள்ள நிலையில் விரிசலில் இருந்த அ.தி.மு.க - பா.ஜ.க உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையமும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.கவை அங்கீகரித்திருப்பதால் டெல்லியில் பா.ஜ.க தலைவர்களுடன் எடப்பாடியால் உறுதியாக பேசமுடியும் என்கிறார்கள்.

தி.மு.கவுக்கு எதிராக பா.ஜ.க ஏற்கனவே களத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.கவும் களமிறங்க இத்தகைய அரசியல் சந்திப்புகள் உதவக்கூடும். எடப்பாடியுடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் டெல்லிக்கு பயணமாகிறார்கள். டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி யாரை சந்திக்கவிருக்கிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com