தர்மயுத்தம் 3.O - தி.மு.கவில் சேர முயற்சிக்கிறாரா ஓபிஎஸ்?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிக்கு இடையே நடந்த அரசியல் சந்திப்பு, தமிழ்நாட்டு அரசியலை பரபரப்பாக்கியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் சந்தித்துப் பேசியதன் மூலமாக தி.மு.கவில் சேர ஓ.பன்னீர் செல்வம் முயற்சி செய்வதாக வதந்தி பரவியது.
தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் மீது எடப்பாடி தரப்பு அவ்வப்போது குற்றம் சுமத்தி வந்திருக்கிறது. சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒ.பன்னீர்செல்வம் தி.மு.கவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சபரீசனை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தது குறித்து நேற்று ஜெயக்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். சபரீசன் - ஓ.பி.எஸ் சந்திப்பின் மூலம், ஓ.பி.எஸ் தி.மு.கவின் பி டீமாக செயல்படுகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. நீண்டநாட்களாக நாம் பேசி வந்த விஷயம்தான். இன்று பூனைக்குட்டி வெளியே வந்த கதையாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. விரைவில் அவர் தி.மு.கவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.
சபரீசன் உடனான சந்திப்பு இப்படியொரு வதந்தியை கிளப்பிவிடும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் மேட்ச் பார்க்க வரும் முதல்வர் ஸ்டாலின் அன்று வராததும், ஓ.பி.எஸ் ஒருவேளை முதல்வரை சந்திக்க முயற்சி செய்து அது முடியாமல் போனதாக அவரது மருமகனை சந்தித்து பேசியிருக்கிறாரோ என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்நிலையில் வதந்திக்கு ஓ.பி.ஸ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தி.மு.க அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆட்பட்டு இருப்பதாகவும் மக்கள் விரோத நடவடிக்கைகளை தி.மு.க அரசு மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அன்றாடம் கொலைகளும், கொள்ளைகளும் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. பத்திரிகையைப் படித்தாலே பாலியல் பலாத்காரங்கள்தான் அதிகம் இருக்கின்றன. தி.மு.க.வினர் அரசு ஊழியர்களை மிரட்டியது, ராணுவ வீரரை தி.மு.க. கவுன்சிலர் கொலை செய்தது, நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டையும், அங்குள்ள வாகனங்களையும் அமைச்சரின் ஆதரவாளர்களே தாக்கியது, அமைச்சர்கள் பொதுமக்களை அடிப்பது, கிண்டல்
செய்வது என பல கேலிக்கூத்துகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருகின்றன.
தமிழர்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க 'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் வளமான பொது அறிவை பெற்றவர்கள். வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது? என்பது அவர்களுக்குத் தெரியும். மக்கள் தங்களுடைய மனக் குமுறலை வெளிப்படுத்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையை முடித்திருக்கும் ஒ.பி.எஸ் இன்னொரு சூறாவளிப் புயலில் இருந்தும் தப்பித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.