நெல்லை தி.மு.க மாவட்டச் செயலாளர் அதிரடி நீக்கம் - நடந்தது என்ன?

நெல்லை தி.மு.க மாவட்டச் செயலாளர் அதிரடி நீக்கம் - நடந்தது என்ன?

திருநெல்வேலியின் தி.மு.க மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப்பை பதவியிலிருந்து நீக்கம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நெல்லை மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியது முதல் பல்வேறு சர்ச்சைகளில் அப்துல் வஹாப் சிக்கியிருந்ததால் கட்சித் தலைமை இப்படியொரு அதிரடி முடிவை கையிலெடுத்திருக்கிறது. அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சரான டி.பி.எம்.மைதீன்கான் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.கவில் 72 மாவட்டச் செயலாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கட்சியின் முக்கியமான அதிகார அமைப்பான மாவட்டச் செயலாளர் பதவி என்பது அமைச்சர் பதவி கிடைப்பதற்கான நுழைவாயில் என்று கட்சிக்குள் பேசப்படுகிறது.

சமீபத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இன்னொரு மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்தது.

பாளையங்கோட்டை பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அப்துல் வஹாப், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் முதல் கட்சியில் மாநகரச் செயலாளர் வரை பலருடனும் மோதல் போக்கை கடைப்பிடித்தார் என்றும் பேசப்படுகிறது. குறிப்பாக நெல்லை மேயர் விஷயத்தில் அப்துல் வஹாப்பின் செயல்பாடு, கட்சித் தலைமைக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் தங்களுடைய மாவட்டத்தில் அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், கவுன்சிலர்கள், கட்சியின் நகர, ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்டவர்களோடு மோதல் போக்கில் இறங்கக்கூடாது என்று தி.மு.க தலைமை பலமுறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சென்ற ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்றது. மேயர் பெயருக்கு பலரும் போட்டியிட்ட நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் அப்துல் வஹாப்பின் ஆதரவாளரான பி.எம்.சரவணன் என்பவரின் பெயர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. ஆனால், மேயராக பதவியேற்றதும் நிலைமை தலைகீழானது. மேயருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக திரண்ட 40 கவுன்சிலர்கள் திருச்சிக்கு வந்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து நெல்லை மேயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். இது குறித்து பேசிய அமைச்சரும், மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் மேயர் சரவணன் மீது சிலர் திட்டமிட்டு புகார் அளிக்கிறார்கள். இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று நிறைய கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கட்சியின் படிப்படியாக வளர்ந்த அப்துல் வஹாப், மாவட்டச் செயலாளராக ஆனதும் மாறிப்போய்விட்டார் என்று சொல்லப்படுகிறது. தி.மு.கவில் கருப்பசாமி பாண்டியனை எதிர்த்து போட்டியிட்டு, மாவட்ட செயலாளரான அப்துல் வஹாப் பின்னாளில் தனக்கென ஆதரவாளர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டியதாக கூறப்படுகிறது. நெல்லை உள்ளாட்சித் தேர்தலில் கூட தனக்கு வேண்டியவர்களுக்கே கவுன்சிலராக போட்டியிட வாய்ப்புக் கொடுத்தார். தன்னுடைய தீவிர ஆதரவாளருக்கே மேயர் பதவியை பெற்றுத் தந்தார். மாநகராட்சி நிர்வாகத்தில் தலையீட்டதால் மேயர் சரவணன் அவரிடமிருந்து விலகிச் சென்றார் என்று கூறப்படுகிறது.

ஆவடி நாசருக்கு பதிலாக அப்துல் வஹாப் அமைச்சரவை பட்டியலில் சேர்க்கப்படுவார். இதன் மூலம் நெல்லை மாநகராட்சியில் நடந்து வந்த குழப்பங்களும் தீரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அமைச்சர் பதவியும் கிடைக்காமல் தற்போது கட்சிப் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூகத்தினராக இருந்தாலும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரிடமும் கட்சித் தலைமை கண்டிப்பாக நடந்து வருகிறது. அமைச்சரவை மாற்றம் தொடங்கி தொடர்ந்து நடைபெறும் அதிரடி நடவடிக்கைகளை அறிவாலய வட்டாரங்கள் ஆச்சர்யத்துடன் கவனிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com