"எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ஷிண்டே ஆட்சி கவிழாது"

"எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ஷிண்டே ஆட்சி கவிழாது"

மகாராஷ்டிரத்தில் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ஷிண்டே அரசு கவிழ்ந்துவிடாது என்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார்.

மகாராஷ்டிர சட்டப்பரவை துணைத் தலைவரிடம் சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகள், ஷிண்டே கோஷ்டியில் இருக்கும் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி மனு கொடுத்துவிட்டு வந்துள்ள நிலையில் அஜித் பவார் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

16 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும் ஷிண்டே-பட்னவிஸ் கூட்டணி அரசு கவிழ வாய்ப்பில்லை. ஷிண்டே அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அஜித்பாவர் தெரிவித்தார். 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதால் அரசு பெரும்பான்மையை இழந்துவிடாது என்பது எனது கருத்தாகும் என்றார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகள் சட்டப்பேரவை துணைத் தலைவர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் பேரவைச் செயலர் ஜிதேந்திர போலே ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அந்த நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து பேரவைத் தலைவர் இன்னும் மும்பை திரும்பாததால் பேரவை துணைத் தலைவரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு வந்ததாக சிவசேனை உத்தவ் தாக்கரே கட்சியின் கொறடா சுநீல் பிரபு தெரிவித்துள்ளார்.

ஆளும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனை மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் 145 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணியை ஆதரிக்கும் பிற கட்சிகளையும் சேர்த்தால் மொத்தம் 162 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதாவது ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையைவிட 17 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக உள்ளனர். எனவே 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தாலும் ஆட்சி கவிழாது என்பதுதான் தற்போதைய நிலையாகும்.

சிவசேனையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அதிகரித்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்துவிட்டார். எனவே மீண்டும் அவர் அரசு அமைக்க முடியாது. அதேநேரத்தில் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மாநில ஆளுநர் செயல்பட்ட விதம் தவறானது என்று கூறி ஆளுநரின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் இது குறித்து பேரவைத் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com