‘விலைபோகாத நான்கு கத்தரிக்காய்களை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக’ அண்ணாமலை விமர்சனம்!

‘விலைபோகாத நான்கு கத்தரிக்காய்களை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக’ அண்ணாமலை விமர்சனம்!

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சரை வாழ்த்திப் பேசுவதற்காக பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், மல்லிகார்ஜுனே கார்க்கே, தேஜஸ்வி யாதவ் போன்ற இந்திய அரசியல் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘விலை போகாத நான்கு கத்திரிகாய்களை சென்னைக்கு அழைத்து வந்து ஸ்டாலினை மார்க்கெட் செய்யும் வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘மல்லிகார்ஜுனே கார்கேவை காங்கிரஸ்காரர்களே மதிப்பது கிடையாது. அவரை ரிமோட் கன்ட்ரோல் போல் ராகுல் வைத்திருக்கிறார். பாரத் ஜோடோ யாத்ராவை தொடங்கி வைப்பதற்காக ராகுல் அழைத்தவுடன் ஸ்டாலின் சென்றது போல், ஸ்டாலினின் 70வது பிறந்த நாளுக்கு திமுக அழைத்தவுடன் ராகுல் வந்திருக்க வேண்டியதுதானே. ஏன் வரவில்லை? ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ திமுக போட்டியிட முன்வருமா? கால் சதவீதம், ஒரு சதவீதம் ஓட்டுக்களைக் கூட தமிழ்நாட்டைக் கடந்து பிற மாநிலங்களில் திமுகவால் வாங்க முடியாது. தேசிய அரசியல் என்றால் என்னவென்றே தெரியாமல், ‘தேசிய அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என பீலா விடுகிறார் ஸ்டாலின்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

‘ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்… பிரதமர் வேட்பாளர் ஆக வேண்டும்’ என பரூக் அப்துல்லா நேற்றைய தினம் பேசிய நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இவ்வாறு விமர்சனம் செய்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com