திமுகவின் நாடாளுமன்ற பணி திருச்சியில் தொடக்கம் : பிரம்மாண்டமாக தயாராகும் அரங்கம்!

திமுகவின் நாடாளுமன்ற பணி திருச்சியில் தொடக்கம் : பிரம்மாண்டமாக தயாராகும் அரங்கம்!

திமுகவிற்கும் திருச்சிக்குமான தொடர்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திமுக தேர்தல் அரசியலில் பங்கேற்கலாமா வேண்டாமா என்ற முடிவை பேரறிஞர் அண்ணா 1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு திமுகவினுடைய வரலாறுகளில் முக்கிய அம்சங்கள் பல திருச்சியை மையப்படுத்தியும், திருச்சியில் இருந்தும் நடைபெற்றுள்ளன.

திருச்சி மாவட்டத்தின் மிகமுக்கிய ஆளுமையாக கே.என்‌நேரு உருவெடுத்த பிறகு திமுகவினுடைய பல்வேறு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் மிகப் பிரம்மாண்டமாக திருச்சியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வரலாறுகள் ஏராளம். சமீபத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தனது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு திருச்சி சிறுகனூர் பகுதியில் மிகப்பிரமாண்டமான மாநாட்டை நடத்தி இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்தது. 

இப்படி "கே.என்.நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் கே.என்.நேரு" என்று திமுகவிலும் சரி, ஒட்டுமொத்த அரசியலிலும் சரி நேருக்கு இணையாக மாநாடு நடத்துவது மிகவும் கடினம் தான் என்று பேசும் அளவிற்கு பெயரெடுத்துள்ளார் கே.என். நேரு.இந்த நிலையில் வரக்கூடிய ஜூலை 26ம் தேதி திருச்சியில் டெல்டா மண்டலங்களுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை திருச்சியில் நடந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டார். அதற்கு உடனே சம்மதம் தெரிவித்த கே.என்.நேரு பணிகளை மிக பிரம்மாண்டமாக தொடங்கி நடத்தி வருகிறார். பயிற்சி பாசறைக்கான தேதி முடிவு செய்யப்பட்ட பிறகு கே.என்.நேரு திருச்சி வரும் ஒவ்வொரு முறையும் மாநாட்டுக்கான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து திட்டங்களை தீட்டி, பந்தல்கள் அமைக்கும் பணி ஆய்வு செய்து வருகிறார்.

திருச்சியில் ஜூலை 26 நடைபெறும்  டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கடமைகள், பணிகள், சவால்களை சந்திப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் வாக்கு சீட்டை சரி பார்க்கும் முறை, வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் முறை, சமூக வலைதளங்களை கையாளும் முறை போன்றவை குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இறுதியாக அன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதைத் தொடர்ந்து ஜூலை 27ஆம் தேதி திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் திருச்சி சங்கமம் 2023 என்ற விவசாயிகள் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதற்கான தயாரிப்பு பணிகளும் மிக பிரம்மாண்டமாக  நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

திமுகவினுடைய முக்கிய அரசியல் நடவடிக்கைகள் பல திருச்சியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது வரலாறு. இந்த நிலையில் வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட நேரடி ஆயத்த பணியை தற்போது திருச்சியில் இருந்து துவங்க இருக்கின்றனர் திமுகவினர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com