திருச்சியில் தி.மு.க கோஷ்டி மோதல் - கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத முடியாத முதல்வர் என்று எடப்பாடி காட்டம்!
திருச்சி மாநகரத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தி.மு.கவின் இருபெரும் கோஷ்டிகள் நேரடியாக மோதிக்கொண்ட சம்பவம், மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தடுக்க முயன்ற பெண் காவலரின் கை முறிந்திருப்பதும், காவல்நிலையத்திற்கு ஏற்பட்ட சேதாரமும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசுபொருளாகியிருக்கின்றன.
திருச்சி கண்டோன்ட்மெண்ட் காவல் நிலையத்திற்கு புகுந்து அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகிகளுக்கு கட்சி வேறுபாடில்லாமல் கண்டனங்கள் குவிகின்றன. தி.மு.கவின் கூட்டணிக்கட்சியான மார்க்கிஸ் கம்யூனிஸ்ட கட்சி கூட தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. ஆளுங்கட்சியினர் காவல்நிலையத்தில் அத்து மீறிய செயல் கண்டனத்திற்குரியது என்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இப்படி நடந்து கொள்வதாகவும், தி.மு.க தலைமை உடனடியாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ததுடன் வழக்கு பதிவு செய்திருப்பதையும் வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். இனி இத்தகைய நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது என்கிற உறுதியோடு அரசு செயல்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தலை தடுத்தல் சட்டத்தின் கீழும் வழக்கு பதிய செய்ய வேண்டமாய் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காட்டமான அறிக்கை விடுத்திருக்கிறார். சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே அதை கண்டித்து அறிக்கை விட்ட நிலையில் திருச்சி மோதல் சம்பவத்தோடு நெல்லை மேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள தி.மு.க கவுன்சிலர்கள் குறித்தும் ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் அறிக்கையில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த முதல் பெருநகரம் என்ற பெருமையை அ.தி.மு.க ஆட்சியில் சென்னை பெற்றிருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் நடப்பது மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? என்று சந்தேகப்படுமளவுக்கு மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஆளும் தி.மு.க-வினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த அமைச்சருக்கும், ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவருக்கும் இடையே யார் பெரியவர் என்ற ஈகோ யுத்தத்தில், ஆளும் திமுக நிர்வாகிகள் திருச்சி கண்டோன்ட்மெண்ட் காவல் நிலையத்திற்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களைத் தடுத்த பெண் காவலரையும்
தாக்கி உள்ளனர். அந்தத் தாக்குதலில் பெண் காவலரின் கை முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் வருகின்றன.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் மேலிடத்தின் அனுமதியைப் பெற்று தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் சொந்தக் கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் உள்ள ஒரு முதலமைச்சரை இப்போதுதான் தமிழகம் முதன்முதலாகப் பார்க்கிறது.
ஒரு அமைச்சருக்கு அவரது கட்சிக்காரர்களே கருப்புக் கொடி காட்டுவதும், ஆளும் திமுக-வின் உள்ளாட்சி மேயர்கள் மற்றும் தலைவர்கள் மீதே உள்ளாட்சி மன்றங்களில் ஆளும் தி.மு.க. கவுன்சிலர்களே புகார் கூறுவதும், தமிழகம் முழுவதும் நடைபெறுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆளும் திமுக நிர்வாகிகளின் அராஜகத்தை கட்டுப்படுத்தி சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்த வேண்டும் என்று எடப்பாடி கோரிக்கையும் விடுத்திருக்கிறார்.
தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், திருச்சியில் நடந்த கோஷ்டி மோதல் பற்றியோ, நெல்லை கவுன்சிலர்களின் போர்க்கொடி குறித்தோ இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் அத்து மீறல் செயல்களால் முதல்வர் கடும் அப்செட்டில் இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் சில நாட்களில் முதல்வரிடமிருந்து அதிரடி நடவடிக்கைகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.