தொழிற்சாலைகள் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளும்  திமுகவின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது  - சீமான்!

தொழிற்சாலைகள் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளும் திமுகவின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது - சீமான்!

தொழிற்சாலைகள் திருத்த மசோதா குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைபாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில், ‘தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தில்’ புதிய திருத்தங்களை மேற்கொள்ளும் சட்ட வரைவினை திமுக அரசு விவாதமின்றி நிறைவேற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் லாபத் தேவையை மட்டுமே கருத்திற்கொண்டு செய்யப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தங்களின் மூலம், தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை அடகு வைக்க முயலும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் விதமாக, ‘தொழிற்சாலைகள் சட்டத் திருத்த வரைவு’ திமுக அரசால் சட்டப்பேரவையில் விவாதமின்றிக் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டத்திருத்த வரைவானது, தொழிலாளர்களின் வேலை நேரம், கூடுதல் வேலை நேரம், கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியம், கூடுதல் வேலைக்கான விடுமுறை, ஓய்வு நேரம் போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைத் தீர்மானிக்கும் ‘தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தின்’ பிரிவு 51 முதல் 59 வரையிலான விதிகளிலிருந்து ஒரு நிறுவனத்திற்கோ, குழுமத்திற்கோ அல்லது குறிப்பிட்ட தொழிற்பிரிவிற்கோ விலக்களிக்க தமிழ்நாடு அரசிற்கு அதிகாரமளிக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதன்மூலம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவது உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அவர்களது குருதியைக் குடிக்கும் முதலாளித்துவத்திற்கு ஆதரவான கொடுங்கோன்மையாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசு இச்சட்டத்திருத்த வரைவினை அறிமுகப்படுத்தும்போதே ‘பெருநிறுவனங்கள் அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையிலேயே இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது’என்று கூறியதிலிருந்தே பல்லாண்டு காலம் போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை, பன்னாட்டு முதலாளிகளிடம் அடகு வைக்கும் சூழச்சிதான் இது என்பது உறுதியாகியுள்ளது. திமுக அரசு இப்புதிய சட்டத்திருத்தம் கொண்டுவருவது குறித்து அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துக் கருத்து கேட்காதது ஏன்?

பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப் பட்டுள்ள ‘ தொழிற்சாலை சட்டத்திருத்த வரைவினை’ திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் வலியுறுத்துகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com