”ராகுல் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை தெரியுமா? ” - கர்நாடக பா.ஜ.க. தலைவர் சொல்லும் சர்ச்சையான தகவல்!

”ராகுல் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை தெரியுமா? ” - கர்நாடக பா.ஜ.க. தலைவர் சொல்லும் சர்ச்சையான தகவல்!

கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கட்டீல். அரசியல் பிரமுகர்கள் பற்றி எதையாவது கூறி சர்ச்சையை ஏற்படுத்துவது இவரது வழக்கம்.

கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது பா.ஜ.க.வுக்கும் பெரும் சவாலாகவே உள்ளது.

திப்புசுல்தானை ஆதரிப்பவர்களை விரட்டி அடியுங்கள். அவர்களுக்கு இந்த மண்ணில் இடமில்லை. அவர்கள் கண்டால் கொல்லுங்கள். நீங்கள் ஹனுமன் பக்தர்களா அல்லது திப்புவின் பக்தர்களா என்று கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியவர் நளின் குமார்.

முன்னதாக ஷிவமொக்காவில் ஒரு முறை பேசிய நளின் குமார், காங்கிரஸ் கட்சி தேவையில்லாமல் திப்பு ஜயந்தியை கொண்டாடிவருகிறது. அதே நேரத்தில் வீர சவார்க்கரை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறது. இப்போதைய நிலையில் நமது நாட்டுக்கு தேவை தேசபக்தி மிக்க வீரசவார்க்கரா அல்லது திப்புசுல்தானா என்று தெரியவேண்டும். இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தயாரா என்று கேட்டு சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நளின்குமார், ராமநகரத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில், ராகுல் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், கோவிட் தொற்று தடுப்பூசி குறித்து அவர் சந்தேகம் எழுப்பியதற்கும் பதில்கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கோவிட் தொற்றின்போது ராகுல் காந்தி, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள கோவிட் தடுப்பூசியை யாரும் போட்டுக் கொள்ள வேண்டும். அதை போட்டுக் கொள்பவர்களுக்கு குழந்தை பிறக்காது என்றும் கூறியிருந்தார்.

இதை குறிப்பிட்டு பேசிய நளின்குமார், ராகுல்காந்தியும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், கோவிட் தடுப்பூசியை போட்டுக் கொண்டால் குழந்தை பிறக்காது என்று கூறி மக்களை திசைத்திருப்பினர். ஆனால், பின்னர் அவர்கள் அந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டனர் என்று குறிப்பிட்டார்.

பின்னர் ராகுல்காந்தி ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை தெரியுமா? தனக்கு குழந்தை பிறக்காது என்று ராகுலுக்குத் தெரியும். அதன் காரணமாகவே அவர் திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு விடியோ மூலம் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் யாத்திரைகள் நடத்துவதன் மூலம் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது பா.ஜ.க. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அடிக்கடி வந்து மாநிலத்தில் பேரணி மற்றும் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். மக்களுக்கு இலவசமாக கோவிட் தடுப்பூசி போடப்பட்டதை மையமாக வைத்து பா.ஜ.க. தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com