நாங்கள் தெய்வமாக வழிபடும் சாவர்க்கரை அவமதிக்க வேண்டாம்! - உத்தவ் எச்சரிக்கை!
விநாயக் சாவர்க்கரை அவமதிக்க வேண்டாம் என்று ராகுல் காந்தியை சிவசேனை உத்தவ் பிரிவின் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். சாவர்க்கரை அவமதிப்பது தொடர்ந்தால் எதிர்க்கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றும் தாக்கரே எச்சரித்துள்ளார்.
ஹிந்துத்துவா கொள்கையின் அடித்தளமாக இருப்பவர் வி.டி.சாவர்க்கர். அவரை நாங்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். எனவே அவரை அவமதிக்கும் வகையில் எதுவும் பேசவேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கேட்டுக் கொள்கிறோம்.
அந்தமான் சிறையில் சுமார் 14 ஆண்டுகள் சாவர்க்கர் கொடுமைகளை அனுபவித்துள்ளார். அவர் பட்ட துன்பங்களை எங்களால் படித்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. அவரும் ஒருவகையில் தியாகம் செய்துள்ளார். அவரை அவமதிப்பதை ஒருபோதும் எங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி தொடர்ந்து சவார்க்கரை அவமதித்து வந்தால் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றும் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.
வீர சாவர்க்கரை நாங்கள் கடவுளாக மதிக்கிறேம். அவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனால் கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டால் அதை சந்திக்கவும் தயாராக இருக்கிறோம் என்றும் தாக்கரே கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை பாதுகாக்கவே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனை கூட்டணி அமைத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். பலரும் வேண்டுமென்றே ராகுல்காந்தியை தூண்டிவிடுகின்றனர். இந்த விவகாரத்தில் நாம் கவனம் செலுத்துவது நேரத்தை வீணடிப்பதாகும் என்று மாலேகானில் ஒரு பேரணியில் பேசுகையில் உத்தவ் கூறினார்.
நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல என்று ராகுல்காந்தி சமீபத்தில் கூறியிருந்தார். அதை குறிப்பிட்டு பேசுகையில் உத்தவ் இவ்வாறு கூறியுள்ளார்.
“எனது பெயர் சாவர்க்கர் அல்ல. எனது பெயர் ராகுல் காந்தி. ஒருபோதும் காந்தி மன்னிப்பு கேட்டதில்லை” என்று எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
பிரதமர் மோடி பற்றி அவதூறு பேசியதான வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் நீரவ் மோடி, லலித் மோடி மற்றும் நரேந்திர மோடி என்ற பெயரைக் கொண்டவர்கள் திருடர்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
பிரதமர் மோடியை ராகுல் அவமதித்து விட்டதாக பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர். ஆனால் மோடி மட்டுமே இந்தியா அல்ல. இதற்காகவா நமது தியாகிகள் தங்கள் உயிரை கொடுத்தார்கள். மோடியை அவமதிப்பது இந்தியாவை அவமதிப்பது ஆகாது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.