“இந்தியாவை குறைத்து மதிப்பிட வேண்டாம்” - ராகுல் காந்திக்கு பா.ஜ.க. கண்டனம்
இங்கிலாந்து சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில் இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எனது தொலைபேதி உளவுபார்க்கப்படுகிறது என்று பேசினார்.
இந்தியாவில் நாடாளுமன்றம், பத்திரிகை, நீதித்துறை மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இது அனைவருக்கும் தெரியும். நான் இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன். ஜனநாயகம் நிலைபெற வேண்டுமானால் நாடாளுமன்றம், பத்திரிகைகள், நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டுமானால் அதற்கான கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். ஆனால், அவை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
நாடாளுமன்றத்தின் முன் நின்றுகொண்டு சில பிரச்னைகளை எழுப்பியதற்காகவும் பேசியதற்காகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இது ஒருமுறை அல்ல மூன்று நான்கு முறை நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் மீது வன்முறை கட்டவிழ்த்துப்படுவதை நீங்கள் படங்களாகவும் செய்திகளாகவும் பார்த்திருக்கலாம் அல்லது படித்திருக்கலாம். எனவேதான் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறுகிறேன்” என்று பேசியிருந்தார்.
இதற்கு பா.ஜ.க, காங்கிரஸ் தலைவர் வெளிநாட்டு மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதாகக் கூறி கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, “ உலக நாடுகள் இந்தியாவின் மீது நன்மதிப்பும், நல்லுறவும் வைத்துள்ள நிலையில் ராகுல்காந்தி வெளிநாட்டு மண்ணில், இந்தியாவைத் தரக்குறைவாகப் பேசியுள்ளது ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரதமர் மோடியை சிறந்த தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஜி20 நாடுகள் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், உலகமே மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளது. மேலும் ரஷியா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடிதான் முன் முயற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில் ராகுல்காந்தியின் பேச்சு கண்டத்துக்குரியது.
இன்றைய சூழலில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் ஆர்வமாக உள்ளன. சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை திசைத்திருப்பும் வகையில் ராகுல் பேசுயுள்ளது கண்டனத்துக்குரியது.
குடும்ப கட்சிக்கு (காங்கிரசுக்கு) வேண்டுமானால் இந்தியா வளர்ந்து வரும் நாடாகத் தெரியாமல் இருக்கலாம். ராகுல்காந்தி புத்திசாலியான நபராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்காக இந்தியாவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
உங்களது தொலைபேசியிலோ அல்லது அலைபேசியிலோ பெகாஸஸ் உளவு மென்பொருள் கருவி இருப்பதாக நீங்கள் கருதினால், உச்சநீதிமன்றம் கேட்டபோது ஏன் அதை புலனாய்வுக்கு அனுப்பவில்லை என்று ராகுலுக்கு சம்பித் பாத்ரா கேள்வி எழுப்பினார்.