எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் கட்சிப் பதவி கொடுங்கள்: அஜித் பவார்!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் கட்சிப் பதவி கொடுங்கள்: அஜித் பவார்!
Updated on

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், “எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதில் ஆர்வம் இல்லை. எனக்கு அந்த பதவி வேண்டாம். அதற்கு பதிலாக கட்சிப் பதவி கொடுங்கள்” என்று தலைமையிடம் கோரியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 24-வது நிறுவன தினம் மும்பையில் அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது அஜித்பவார் தனது கோரிக்கை வலியுறுத்தியதாகத் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு கொடுத்தபோது கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று தம்மிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. ஆனால், கட்சி எம்.எல்.ஏ.க்களின் வற்புறுத்தலின் பேரில் அந்த பதவியை ஏற்றுக்கொண்டேன் என்றும் பவார் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம். கட்சியில் பதவி கொடுங்கள் என்று கோரியுள்ள போதிலும் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டியது கட்சித் தலைமைதான் என்றும் அஜித் பவார் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம். கட்சியில் எனக்கு பதவியும் பொறுப்பும் கொடுங்கள். நான் அதை சிறப்பாக செய்கிறேன் என்கிறார் அஜித் பவார்.

மகாராஷ்டிரத்தில் மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி (சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி) ஆட்சியில் இருந்தபோது உத்தவ் தாக்கரே முதல்வராகவும், அஜித்பவார் துணை முதல்வராகவும் இருந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிவசேனை கட்சியில் அதிருப்தியாளர்கள் கோஷ்டி ஷிண்டே தலைமையில் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். துணை முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்றார்.

இதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தமது மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலேவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும் கட்சியின் மற்றொரு முத்த தலைவரை இதர மாநிலங்களுக்கான செயல் தலைவராகவும் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் ஜெயந்த் படேலுக்கும் அஜித் பவாருக்கும் ஒத்துப்போகவில்லை. அங்கு ஜெயந்த் படேல் தலைமையில் ஒரு கோஷ்டியும், அஜித் பவார் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி விதிகளின்படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், ஜெயந்த படேல் கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத் தலைவராக தொடர்கிறார்.

எனினும் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் அஜித் பவார் செயல்பாடுகள் சரியில்லை என்று கட்சி மேலிடம் கருதுவதாகத் தெரிகிறது. ஆளுங்கட்சி தலைவர்களுடன் மறைமுக உறவு வைத்துக் கொண்டு அஜித் பவார் செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com