கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் இரட்டைத் தலைமை - தேர்தல் வரை தாங்குமா?

கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் இரட்டைத் தலைமை - தேர்தல் வரை தாங்குமா?

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. டெல்லியில் நடைபெற்ற உயர்நிலை குழுக் கூட்டத்தில் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தேர்தல் பொறுப்பாளர்களான தர்மேந்திர பிரதானும் அண்ணாமலையும் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இன்னும் இறுதி முடிவுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியிலும் வெளியாகிவிட்டது. இதுவரை 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக செயல்பட்டிருக்கிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக காங்கிரஸ் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது.

அறிவிக்கப்பட்ட 166 பேரில் 21 பேர் புதுமுகங்களாக இருக்கிறார்கள். அரசியல் பின்னணியில்லாத பலருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எப்படியாவது வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதால் காங்கிரஸ் கட்சி அனைத்து விதமான தேர்தல் கணக்குகளையும் முன்வைத்து பட்டியலை விளியிட்டு வருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் குடும்ப வாரிசுகளுக்கு வாய்ப்பு தருவது பற்றிய சர்ச்சை பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் என அனைத்து கட்சிகளிலும் நிலவி வருகிறது. தந்தைக்கு போட்டியிட மறுப்பு இருந்தால், அதற்கு பதிலாக மகனுக்கு தருமாறு கோரிக்கை எழுப்பப்படுகிறது. பிற கட்சிகளிலிருந்து சேருபவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதா அல்லது எம்.எல்.சி தேர்தலில் வாய்ப்பு அளிப்பதா என்பது குறிது அனைத்துக் கட்சிகளுமே ஆலோசனையில் ஈடுபட வேண்டியிருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வந்த நாள் முதல் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். எந்த மாநிலமாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் எப்போதும சர்ச்சைக்குரியதாக ஆகும். வேட்பாளர் பட்டியல் வெளியானதும் கோஷ்டி பூசல் வெடிக்கும். ஆனால், இம்முறை எந்தவொரு கோஷ்டிப்பூசலும் இல்லாமல் அமைதியான சூழல் நிலவுகிறது.

எப்போதும் டெல்லியின் உத்தரவைப் பெற்று தாமதகமாக வேட்பாளர்களை அறிவிக்கும் காங்கிரஸ் கட்சி இம்முறை சுறுசுறுப்பாக செயல்பட்டு முந்திக் கொண்டிருக்கிறது. ஆளும் பா.ஜ.க, ஜனதாதளம் கட்சிகளுக்கு முன்பாகவே 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து அசத்தியிருக்கிறார்கள்,

இதுவரை வெளியான பட்டியலில் உள்ள வேட்பாளர்களில் பாதிப்பேர் சீதாராமையாவின் ஆதரவாளர்கள். மீதிப்பேர் டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் என்கிறார்கள்.

இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட இருவரோடும் நெருங்கியத் தொடர்பில் இருப்பவர்கள். இரு தரப்பினருக்கும் சரிக்கு சமமாக தொகுதிகள் பிரித்து தரப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும், இருவருக்கும் இடையே மோதல் வந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருக்கிறது. பஞ்சாப், குஜராத் தேர்தல்கள் போல் அல்லாமல் எந்தவித தலையீடும் செய்யப்போவதில்லை என்பதை ஏற்கனவே காங்கிரஸ் மேலிடம் தெளிவுப்படுத்திவிட்டது.

எது எப்படியிருந்தாலும் அ.தி.மு.கவில் முன்னர் இருந்த இரட்டைத் தலைமை என்கிற நிலையை நோக்கி கர்நாடக காங்கிரஸ் மெல்ல நகர்ந்து வருகிறது. முதலில் ஆட்சிக்கு சீதாரமையா, கட்சிக்கு டி.கே சிவகுமார் என்று சொல்லப்பட்டு வந்த நிலை மாறி, இருவருமே நம்மூர் ஈ.பி.ஸ், ஓ.பி.எஸ் போன்று உருவெடுத்திருக்கிறார்கள். இது நிச்சயமாக ஒற்றைத் தலைமையை நொக்கி நகரும் என்று உறுதியான நம்பலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com