நெல்லையில் பொதுக்குழு, மதுரையில் பொதுக்கூட்டம் என அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் அதிரடி திட்டங்கள்! நிமிரும் அதிமுக!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்துவிட்டது. முடிவுகள் எப்படி இருந்தாலும், எடப்பாடி தரப்பின் உற்சாகத்தை யாராலும் குலைக்க முடியாது. வராது வந்த மாமணியாக நடந்த இடைத்தேர்தல் நேரத்து குழப்பங்களை பயன்படுத்தி, அ.தி.மு.கவை எடப்பாடி பக்கம் முழுமையாக கொண்டு வந்துவிட்டார்கள்.
இனி நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டும். இதற்கிடையே ஏதாவது இடைத்தேர்தல் வந்தாலும் களத்தில் இறங்க தயாராகவே இருக்கிறது. இதற்கிடையே தென் மாநிலங்களில் எடப்பாடியின் அ.தி.மு.கவுக்கு செல்வாக்கு இல்லையென்பதை முறியடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
முதல் கட்டமாக தேர்தல் ஆணையத்தின் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் அடிப்படையில் ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறார்கள். அடுத்து வரப்போகும் இரண்டு வாரங்களில் தேர்தல் ஆணையத்திடமிருந்து விளக்கம் வந்துவிடும். அதை முன்வைத்து தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகரை அணுக இருக்கிறார்கள்.
மூன்று வாரங்களில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.கவின் உறுப்பினராக முடிவெடுப்பதா, இல்லையா என்பது தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிறார், சபாநாயகர் அப்பாவு. ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரோடு உள்ள 3 எம்.எல்.ஏக்களை கட்சியிலிருந்து நீக்கியாகிவிட்டது. அவர்களை கட்சி சாராதவர்களாக அறிவித்து பின்வரிசையில் அமர வைக்கவேண்டும் என்று எடப்பாடி தரப்பு கோரிக்கை எழுப்பும்.
அடுத்ததாக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதையும் நெல்லையில் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பொதுச்செயலாளர் என்கிற இடத்திலிருந்த நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடிக்கு உறுதி செய்யப்போகிறார்கள். கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் ஆனதும், கட்சியின் அனைத்து கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசம் வந்துவிடும்.
வரும் மே மாதம் மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் எடப்பாடி தரப்பு முடிவு செய்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு தென் தமிழ்நாட்டில் செல்வாக்கில்லை என்பதை பொய்யாக்கும் வகையில் அதை பிரம்மாண்டமாக நடத்திட திட்டம் தயாராகி வருகிறது. முக்குலத்தோர் செல்வாக்கு தனக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டவர்களை முன்வைத்து பொதுக்கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.
மதுரை பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்யும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள். இதற்காக டெல்லியைச் சேர்ந்த பெரிய ஜிக்கள் திரண்டு மதுரைக்கு வரவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.