மல்லிகார்ஜுன கார்கே மகனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கர்நாடகத்தில் வருகிற மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்வது என்று பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை எப்படியாவது மீட்டு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நான் பிரதமரை குறிப்பிட்டு பேசவில்லை. பா.ஜ.க.வைத்தான் அப்படிச் சொன்னேன் என்றார் மல்லிகார்ஜுன கார்கே.
இதனிடையே பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி ஒரு விஷக் கன்னி. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஏஜெண்டாக அவர் செயல்படுகிறார் என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி என்னை தாக்கிப் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இதுவரை என்னை 91 முறை காங்கிரஸ் கட்சியினர் அவமதித்துள்ளனர் என்று புகார் கூறியிருந்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமரை தாக்கிப் பேசிய இரண்டு நாளில் அவரது மகன் பிரியங்க் கார்கே, பிரதமர் தகுதியற்றவர் என்று பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்ச்ர் அனுராக் தாக்குர் பேசுகையில், கர்நாடக மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் விரக்தியில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியையும் அவரது சமூகத்தையும் தாக்கிப் பேசிவருகின்றனர் என்றார். தோல்வி பயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே எல்லைமீறி பேசியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது தந்தை எல்லை மீறி பேசினார். இப்போது மகன் அவரைப் போலவே பேசியுள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை குறிவைத்து எனது மகன் பேசவில்லை. அவர் மக்களவை உறுப்பினரைத்தான் தாக்கிப் பேசியுள்ளார். காங்கிரஸார் எங்கு எதைப் பேசினாலும் அதை மோடியை குறிவைத்து பேசுவதாக புகார் கூறுவது பா.ஜ.க.வுக்கு வழக்கமாகிவிட்டது என்று கூறியிருந்தார்.
இதனிடையே பா.ஜ.க. தலைவரும் மோடி அமைச்சரவையில் வேளாண் துறையில் இணை அமைச்சராக இருப்பவருமான ஷோபா கரந்தலஜே, பிரியங்க் கார்கேவின் அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து பிரியங்க் கார்கேயின் அவதூறு பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவருவதாகவும் இது தொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்குமாறு கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விஷக்கன்னி என்று கூறி அவதூறாக பேசியதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசனகெளட பாட்டீல் யத்னாலுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையும் மே 3ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம், கொப்பம் மாவட்ட தேர்தல் அதிகாரி இதற்கான நோட்டீஸை அனுப்பியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அவதூறு பேசியதற்காக உடனடியாக விளக்கம் அளிக்குமாறும் அந்த அதிகாரி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி சேர்ந்த இரு தரப்பினரிடமும் விளக்கம் கேட்டுள்ளார்.