கர்நாடகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட்! குஜராத் தேர்தல் உத்தியை கைவிடுகிறது பா.ஜ.க.!

கர்நாடகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட்! குஜராத் தேர்தல் உத்தியை கைவிடுகிறது பா.ஜ.க.!

கர்நாடகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. தற்போது அங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது. மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க. முனைப்பாக உள்ளது. மேலும் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து தேர்தலுக்கு தயாராகி வருவதால், பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தல் சவாலாக இருக்கும்.

தற்போதுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு இல்லை. மேலும் 40 சதவீத கமிஷன் ஆட்சி என்ற கெட்டபெயரும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற மூத்த தலைவர்

எடியூரப்பாவை நம்பியே பா.ஜ.க. தேர்தல் களத்தை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் ஹிந்தி பேசும் வடமாநிலங்களில் பயன்படுத்தும் தேர்தல் உத்தியை கைவிட்டு கர்நாடகத்தில் தனி உத்தியுடன் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராகி வருகிறது. கர்நாடக பா.ஜ.க.வில் பல்வேறு கோஷ்டிகள் இருந்தாலும், ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கு காரணம் பல்வேறு கோஷ்டிகள் இருந்தாலும் ஒவ்வொரு தலைவருக்கும் கணிசமான செல்வாக்கும், வாக்கு வங்கியும் இருப்பதுதான். கோஷ்டிப்பூசல் இருந்தாலும் தேர்தல் வெற்றிதான் முக்கியம் என்று பா.ஜ.க. கருதுகிறது.

பொதுவாக வடமாநிலங்களில் பதவியிலிருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்காமல் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவது வழக்கம். அதேபோல பா.ஜ.க. எதிர்ப்பு அலை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆட்சியின் கடைசி கால கட்டத்தில் அமைச்சரவையும், முதல்வரும் மாற்றப்பட்டு வந்தனர்.

இந்த முறை எம்.எல்.ஏ.க்களின் உறவினர்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே குஜராத் தேர்தல் உத்திகளே கர்நாடகத்திலும் பின்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கர்நாடகத்தில் உள்ள அரசியல் நிலைமைய கருத்தில்கொண்டு குஜராத் உத்தியை கைவிட பா.ஜ.க. தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மாநிலத்தில் ஏறக்குறைய 120 தொகுதிகளில் பா.ஜ.க.வினர் தங்கள் சொந்த செல்வாக்கில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை அவர்களில் சிலருக்கு தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டால், அவர்கள் வேறுகட்சிகளுக்கு தாவ தயங்கமாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

கர்நாடகத்தில் தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களில் சிலர் 75 வயதை கடக்கும் நிலையில் உள்ளனர். சிலருக்கு உடல்நிலை சரியில்லை. எனவே ஐந்து அல்லது 6 பேர் தவிர மற்றவர்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிகிறது. சமீபத்தில் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பாவும் இதை உறுதிசெய்திருந்தார்.

குஜராத் தேர்தல் உத்திகளால் சில பாதகமும் ஏற்படும். குஜராத்தில் 42 எம்.எல்.ஏ.க்களுக்கும், ஹிமாச்சல் மாநிலத்தில் 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டது. ஆனால், அந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தலுக்குப் பின் சிலர் கட்சிக்கு எதிராக போக்கொடி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாளம் கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்கள் போட்டியிட்ட தொகுதியே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் மாநிலத்துக்கு பலமுறை வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com