யாருக்கு தேர்தல் டிக்கெட்? பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா பதில்!
கர்நாடக மாநிலத்தில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜக. ஆட்சி நடக்கிறது. அங்கு .இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் ஏற்கெனவே தனியாக போட்டியிடப்போவதாகக் கூறி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. தற்போதைய முதல்வர் மீது 40 சதவீத கமிஷன் முதல்வர் என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது.
இந்த நிலையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்று ஆட்சியமைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிவருகிறார்.
வயதை காரணம் காட்டி எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டாலும் அவருக்கு லிங்காயத்து சமுதாயத்தினரிடம் அதிக செல்வாக்கு இருப்பதால் அவரை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. முயன்று வருகிறது.
இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களில் 5 அல்லது 6 பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் தேர்தல் டிக்கெட் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் முதல்வர் யார் என்பது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி முடிவு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்று பத்திரிகையாளர்கள் எடியூரப்பாவிடம் கேள்வி எழுப்பியதற்கு, நான்கு அல்லது ஐந்து பேரைத் தவிர அனைவருக்கும் தேர்தல் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பிற கட்சிகளிலிருந்து விலகி பா.ஜ.க.வுக்கு வந்தவர்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்படுமா என்று கேட்டதற்கு, யார் வேண்டுமானாலும் பா.ஜ.க.வுக்கு வரலாம். அதேபோல பா.ஜ.க.விலிருந்து விலக விரும்புவர்களும் வெளியேறலாம். ஆனாலும் பலரும் பா.ஜ.க.வில் சேரவே விரும்புகின்றனர். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் எடியூரப்பா.
முதல்வராக யார் இருப்பார்கள் என்று கேட்டதற்கு, தேர்தலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதை முடிவு செய்வார்கள், தற்போது தேர்தல் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எடியூரப்பா போன்றவர்கள் முதல்வர் பதவிக்கு பேசப்படாத நிலையில் மக்கள் பா.ஜ.க.வை விட்டு விலகிப்போய்விட மாட்டார்களா என்று கேட்டதற்கு, அதற்கான வாய்ப்பு இல்லை. நான் எங்கு சென்றாலும் அங்கு பா.ஜ.க.வுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே பா.ஜ.க. நிச்சயம் இந்த தேர்தலில் 140 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றார்.
தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளதால், இந்த தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிடமாட்டார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், முதல்வர் நாற்காலியை பிடிக்கலாம் என்று காங்கிரஸ் கனவு காண்கிறது. அது நிச்சயம் நடக்காது என்று அவர் கூறினார்.