மகாராஷ்டிரத்தில் எந்த நேரமும் தேர்தல் வரலாம்: உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரத்தில் எந்த நேரமும் தேர்தல் வரலாம்: உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் எப்போதுவேண்டுமானாலும் நடக்கலாம். தேர்தலை சந்திக்க சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி தயாராக இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அடுத்த 15 அல்லது 20 நாட்களில் கவிழ்ந்துவிடும் என்று உத்தவ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரெளத் கூறியிருந்த நிலையில் தாக்கரே இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே மேலும் கூறுகையில், “ மகாராஷ்டிரத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடைபெறலாம். அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். இதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்படலாம்” என்று ஜல்கான் மாவட்டத்தில் ஒரு பேரணியில் பேசுகையில் உத்தவ் தாக்கரே கூறினார்.

அடுத்த ஆண்டு மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஷிண்டே கட்சிக்கு மொத்தம் உள்ள 288 இடங்களில் 48 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர் பவன்குலே உறுதிபட தெரிவித்துள்ளார். 48 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் ஒரு கட்சியின் தலைமையில் போட்டியிட தயாரா என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரினார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாதி (கூட்டணி) உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியமைத்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சிவசேனை கட்சியில் பிளவு ஏற்பட்டதால் உத்தவ் தாக்கரே பதவி இழந்தார். ஷிண்டே தலைமையிலான எதிர்கோஷ்டி, பா.ஜ.க.வுடன் கைகோர்த்து ஆட்சியை கைப்பற்றியது. யார் உண்மையான சிவசேனை என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஷிண்டே தலைமையிலான பிரிவுதான் உண்மையான சிவசேனை கட்சியாகும் என்று கூறி தேர்தல் ஆணையம் அதற்கு அங்கீகாரம் அளித்தது. சிவசேனை கட்சியில் வில்-அம்பு சின்னமும் ஷிண்டே பிரிவுக்கு வழங்கப்பட்டது. உத்தவ் கட்சிக்கு புதிய பெயரும், சின்னமும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் வரும் தேர்தலில் ஷிண்டே மற்றும் அவரது கோஷ்டியினருக்கு தமது கட்சியினர் பாடம் புகட்டுவார்கள். அவர்களின் அரசியல் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடும் என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். எங்கள் கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை.

மகாராஷ்டிரம் துணிச்சல் மிகுந்தவர்கள் பிறந்த மண். இங்கு துரோகிகளுக்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் அரசியல் கூட்டணி மாற்றியமைக்கப்படலாம் என்ற வதந்தி சில நாட்களாக உலவி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜீத் பவார் மகா விகாஸ் கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க.வுடன் கைகோர்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும் கட்சியின் தலைவர் சரத் பவார் இதை மறுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com