ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள், 3 பிரதான வேட்பாளர்கள் - மிகக்கடுமையான போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள், 3 பிரதான வேட்பாளர்கள் - மிகக்கடுமையான போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு நிறைவடைகிறது. பிரச்சாரம் உச்சகட்டத்தைத் தொட்டிருக்கும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று தொகுதியில் பல இடங்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

2021 தேர்தல் நேரத்தில் ஈரோடு கிழக்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,28,402 ஆக இருந்தது. தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை 2, 27, 547 ஆக இருக்கிறது. யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை விட யாருக்கு எத்தனை சதவீதம் வாக்கு கிடைக்கும் என்பதைப் பொறுத்தும் தமிழக அரசியலில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை அ.தி.முகவுக்கும் தி.மு.கவும்க்கு ஏறக்குறைய சமபலமுண்டு. குறைந்தபட்ம் 43 சதவீத வாக்குகளை இரு தரப்பும் கடந்த இருபதாண்டுகளாக பெற்று வருகின்றன. வலுவான கூட்டணி அமையும் பட்சத்தில் 43 சதவீத வாக்குகளை கடந்து கூடுதல் வாக்குகள் பெறமுடியும். ஆகவே, வலுவான கூட்டணி சார்பில் போட்டியிடுபவரே இதுவரை வெற்றி பெற்றிருக்கிறார்.

2011 தேர்தலில் அ.தி.மு.கவும் தே.மு.தி.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அ.தி.மு.கவுக்கு 40 சதவீத வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 10 சதவீத வாக்குகளும் இருப்பதாக நம்பப்பட்டு வந்ததை ஈரோடு கிழக்கு வாக்காளர்களும் உறுதிப்படுத்தினார்கள். தே.மு.தி. கட்சியின் சந்திரகுமார் 50 சதவீத வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். அதுதான் தொகுதியின் அதிகபட்ச வெற்றி வாக்கு சதவீதம்.

தற்போது அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் தென்னரசு, 2016 தேர்தலில் 64 ஆயிரம் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றவர். அவரை எதிர்த்து நின்ற தி.மு.கவின் சந்திரகுமார் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றுப் போனார். அப்போது தே.மு.தி.க கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்த சந்திரகுமார், தேர்தல் நேரத்தில் கட்சியிலிருந்து விலகி தி.மு.க சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோற்றுப்போனார்.

2021 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வே.ரா, 67 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதாவது 44 சதவீத வாக்குகள். தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளருக்கு கிடைத்த வழக்கமான வெற்றி சதவீதம்தான். ஆக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு ஆதரவு அலையோ, எதிர்ப்பு அலையோ இல்லை.

காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து, அ.தி.மு.க கூட்டணியில் தா.ம.க வேட்பாளர் யுவராஜா போட்டியிட்டார். 58 ஆயிரம் வாக்குகள் வாங்கி இரண்டாமிடத்தை பெற்றார். மூன்றாமிடத்தை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு 11 ஆயிரம் வாக்குகளும், நான்காம் இடத்தைப் பெற்ற மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. 1500 பேர் நோட்டாவை தேர்ந்தெடுத்தார்கள்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவார் என்று தி.மு.க அமைச்சர்கள் அடித்து சொல்கிறார்கள். பதிவாகப்போகும் வாக்கு சதவீதமும் முக்கியமான விஷயம். ஈரோடு கிழக்கு வாக்காளர்களில் சராசரியாக 70 சதவீதம் மட்டுமே வாக்களிக்க இதுவரை முன்வந்திருக்கிறார்கள். இம்முறை 85 சதவீதத்தை தாண்டி வாக்குப் பதிவு இருக்கப்போகிறது.

2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்களில் 90 சதவீதம் பேர் ஓட்டுப்போட முன்வந்தால் மட்டுமே எந்தவொரு வேட்பாளராலும் ஒரு லட்சத்தை தாண்டி வாக்குகள் பெற முடியும். கடுமையான போட்டி நிலவுவதால் ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com