ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ஓ.பி.எஸ்ஸிடமிருந்து இன்னொரு ட்விஸ்ட்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ஓ.பி.எஸ்ஸிடமிருந்து இன்னொரு ட்விஸ்ட்!

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று சர்ச்சை எழுந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டிய எடப்பாடி அணிக்கு தீர்வும் கிடைத்தது. ஓ.பி.எஸ் தரப்பையும் தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களையும் விசாரணை செய்த பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க குழுக்கள் வார இறுதியில் பரபரப்பாக இருந்தன.

அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டத்தை தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை வாங்கும் முயற்சியில் எடப்பாடி அணி இறங்கியது. எப்படியும் எடப்பாடி அணிக்குத்தான் இரட்டை இலை என்று முடிவாகிவிட்டதால், இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கே எங்களது ஆதரவு என்றது பா.ஜ.க.

எடப்பாடி அணியினர் அனுப்பி வைத்த படிவத்தை பூர்த்தி செய்து ஞாயிறு இரவுக்குள் ஒப்படைக்குமாறு கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வேண்டுகோள் விடுத்திருந்தார். சம்பந்தப்பட்ட பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம், மற்றும் 'நோட்டரி பப்ளிக்' சான்றுடன் இணைத்து, ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரிக்கிறேன் என்று அடிக்குறிப்பிட்டு கையெழுத்திடும்படி படிவம் டிசைன் செய்யப்பட்டிருந்தது.

இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, பொதுக்குழுவுக்கு அதிகாரம் வழங்கியதை வரவேற்று என்னுடைய சொந்த விருப்பத்தை தாக்கல் செய்கிறேன் என்று குறிப்பிட்டு நிறைய பொதுக்குழு உறுப்பினர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அனுப்பியிருந்தார்கள். 85% பொதுக்குழு உறுப்பினர்களின் படிவம் கிடைத்துவிட்டதால் அதை எடுத்துக்கொண்டு அவைத்தலைவர் டெல்லிக்கு பயணமாகியிருக்கிறார்.

ஓ.பி.எஸ் தரப்பு அமைதியாகிவிட்டது என்று நினைத்த நேரத்தில் இன்று இன்னொரு ட்விஸ்ட். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட படிவத்தில் தென்னரசு பெயர் மட்டுமே இருந்தது, நாங்கள் அறிவித்த வேட்பாளர் பற்றிய விபரங்கள் இல்லை. வேறு யாரையாவது சிபாரிசு செய்வதற்கான இடமும் தரப்படவில்லை என்று ஓ.பி.எஸ் அறிக்கை விடுத்திருக்கிறார்.

அதாவது எடப்பாடி அணி, தன்னிச்சையாக செயல்பட்டு தென்னரசுவின் பெயரை மட்டும் குறிப்பிட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை பெற்றிருக்கிறார்கள். இது உச்சநீதிமன்றத் தீர்ப்பு தந்த அறிவுரைக்கு மாறானது என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் அவைத்தலைவர் சமர்ப்பிக்கும் ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பியிருப்பதால் இன்னொரு படிவம் தயாரிக்கப்பட்டு, திரும்பவும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களது ஒப்புதலை பெறலாம். ஆனால் அதற்கு காலஅவகாசமில்லை. நாளைக்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தாக வேண்டும். ஆக மொத்தம், இன்னொரு பரபரப்பான காட்சி ஆரம்பமாகியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com