ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளர் தனது மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினாரா?
இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்து, பிரச்சாரம் ஆரம்பமாகிவிட்டது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு இடையே கடும்போட்டி உருவாகியிருக்கிறது. ஆனால், இவர்களோடு இன்னும் 81 பேர் போட்டியில் இருக்கிறார்கள்.
ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 111 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாமல் இருப்பதை தடுப்பதற்காக தன்னுடைய வேட்பாளரை திரும்பப் பெறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். குக்கர் சின்னம் கிடைக்காது என்பதால் அ.ம.மு.க.வும் போட்டியிடாது என்று டி.டி.வி. தரப்பு அறிவித்தது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் முடிவில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் செந்தில் முருகன் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு முன்பே ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கம் தரப்படவில்லை. வேட்பாளரை முன்மொழியும் படிவங்கள் சரியாக பூர்த்தி செய்யவில்லை என்கிற விமர்சனம் எழுந்தது. ஆனால், செந்தில் முருகனை முன்மொழிந்து இருவர் மனுதாக்கல் செய்திருந்தார்கள்.
இந்நிலையில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளரான செந்தில்முருகன் Affidavit என்னும் தன்னுடைய வருமானம் மற்றும் சொத்து விபரங்களை சரிவர தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது. செந்தில் முருகனை முன்மொழிந்த இரண்டு விண்ணப்பங்களிலும் வருமானம் மற்றும் சொத்து கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
வேட்புமனுத்தக்கல் செய்யப்படும்போது சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்கவேண்டும் என்பது விதி. சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் கூட கவனமாக சமர்ப்பிப்பார்கள். அ.தி.மு.க போன்று பல தேர்தல் அனுபவங்களை கொண்ட கட்சியின் நிர்வாகிகள், சொத்துக்கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க மறந்துவிட்டார்கள் என்பதை ஏற்கமுடியவில்லை.
தன்னுடைய வேட்புமனு எப்படியும் நிராகரிக்கப்படும் என்கிற நம்பிக்கையில் வேட்பாளர் இருந்திருக்கலாம் அல்லது சொத்துக்கணக்கு விபரங்களை சமர்ப்பிக்காமல் தவிர்ப்பதன் மூலம் தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கலாம்.
ஆகவே, ஓ.பி.எஸ் அணியைப் பொறுத்தவரை எடப்பாடி அணிக்கு இடைத்தேர்தல் மூலம் நெருக்கடி தருவதுதான் நோக்கமே தவிர, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற நினைப்பது நோக்கமாக இருந்திருக்கவில்லை என்பது உறுதியாகிறது.