ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - இலவச மகளிர் பயண திட்டத்தை நம்பியிருக்கும் தி.மு.க கூட்டணி!
இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. ஒரே ஒரு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் என்றாலும் ஏகப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரத்தில் இறங்கிவிருக்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க போன்ற பெரிய கட்சிகள் மட்டுமல்ல சிறிய கட்சிகளும் 40 பேச்சாளர்களை பிரச்சாரத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள். இதில் வை.கோவின் கட்சி மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒ.பி.எஸ் தரப்பும் கூட 40 பேர்களை தேர்வு செய்திருக்கிறது. நட்சத்திர பேச்சாளர்களின் பிரசார செலவுகள், வேட்பாளர்களின் செலவில் வராது. அரசியல் கட்சிகளின் கணக்கில் வரும் என்பதால் அனைத்து கட்சிகளும் ஆர்வம் காட்டியிருக்கின்றன.
இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஆதரவு கேட்டு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு தந்து வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான இலவச பஸ் பயணம், புதுமைப் பெண் திட்டம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இலவச பேருந்து திட்டத்தினால் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் இலவச பயணம் செய்துள்ளதாகவும் பேசியிருக்கிறார்.
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான இலவச பஸ் பயணம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு நாளும் 40 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் பெண்களால் மாதம் 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை சேமிக்க முடிகிறது.
அதே நேரத்தில் திட்டத்தை மறு ஆய்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றன. கொரோனா தொற்றுக்குப் பின்னர் அரசுப் பேருந்து போக்குவரத்து குறைந்து வருகிறது. டீலக்ஸ் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பொருளாதார ரீதியாக வசதியாக உள்ள பெண்களும் இலவச பஸ் பயணத்தை பயன்படுத்திக்கொள்வதாகவும், இதற்குப் பதிலாக பேருந்து கட்டணத்தை குறைத்திருந்தால் அனைவருக்கும் பலன்கள் சென்றடைந்திருக்கும் என்கிறார்கள், இணையவாசிகள்.
அரசுப் போக்குவரத்து துறை, நிதிநெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் எப்படி சமாளிக்கப்போகிறது என்கிற கேள்வி எழுந்திருந்தாலும் இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி முன்னிறுத்தும் முக்கியமான சாதனையாக மகளிர் இலவச பஸ் பயணம் திட்டம் இருக்கப்போகிறது.