ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் - ஜனநாயகத்திற்கு பின்னடைவு : ஜி.கே. வாசன் வருத்தம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் - ஜனநாயகத்திற்கு பின்னடைவு : ஜி.கே. வாசன் வருத்தம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் 53 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு, 20 ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். ஒரு பெரும் வாக்கு வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடந்தது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த பின்னடைவு என்று குறிப்பிட்டிருக்கிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக யுவராஜா போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மீண்டும் போட்டியிடுவதில் யுவராஜா ஆர்வம் காட்டினார். ஆனால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொகுதியை விட்டுக்கொடுத்தது. தான் போட்டியிடப்போவதில்லை என்றும் அ.தி.மு.கவோ அல்லது பா.ஜ.கவோ போட்டியிட்டால் ஆதரிக்கப்போவதாகவும் அறிவித்தது.

ஈரோடு கிழக்கு தேர்தல் களம், களேபரமானதற்கு முதல் காரணம், ஜி.கே. வாசன் என்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டு ரன்னராக வந்திருப்பதால் மீண்டும் போட்டியிடுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தன. மீண்டும் போட்டியிடுவோம் என்று கட்சியை விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் சம்மதம் தெரிவித்திருப்பார்கள்.

ஒருவேளை த.மா.க போட்டியிட்டிருந்தால் அ.திமு.க கூட்டணி இன்னும் வலுவாக களத்தில் இருந்திருக்கும். பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் த.மா.கவை ஆதரித்திருப்பதார்கள். இரட்டைத் தலைமை விஷயத்தில் இருதரப்பாக நின்று மோதிக் கொண்டிருந்த அ.தி.மு.க அணிகளும் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்திருந்திருப்பார்கள்.

தி.மு.க கூட்டணியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறமுடியாது என்றாலும் தி.மு.கவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டத்தை காட்டியிருக்கலாம். ஆனால், தனக்குக் கிடைத்த வாய்ப்பை த.மா.க தவறவிட்டுவிட்டது.

அ.தி.மு.க & பா.ஜ.க என இருதரப்பிற்கும் நெருக்கமாக உள்ள ஜி.கே வாசனால் அனைத்துக் கட்சிகளையும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்க முடியும். இடைத்தேர்தலில் கூட அனைத்து வார்டுகளிலும் பிரச்சாரம் செய்த ஒரே கூட்டணிக்கட்சித் தலைவராக ஜி.கே வாசனை மட்டும் சொல்ல முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com