ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - மந்தமான வாக்குப்பதிவின் காரணம் என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - மந்தமான வாக்குப்பதிவின் காரணம் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தற்போதைய 3 மணி நிலவரப்படி 59.22 சதவீதத்தை கடந்திருக்கிறது. உள்ளூரில் உள்ள அனைத்துக் கட்சி பிரமுகர்களும், வேட்பாளர்களும் காலை 10 மணிக்குள் தங்களது வாக்குகளை செலுத்திவிட்டார்கள். ஆனாலும், எதிர்பார்த்த அளவு வாக்குப்பதிவில் விறுவிறுப்பு இல்லை என்கிறார்கள்.

இடைத்தேர்தலில் இதுவரை ஏராளமான புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மட்டுமல்லாமல் பிற கட்சிகளும் புகார்கள் அளித்திருக்கின்றன. தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் தினமும் முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் ஆணையத்திலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடமும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என பணம் மற்றும் குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக பட்டி தேர்தல் நடைமுறை இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து தினமும் பணமும், விருந்தும் அளிக்கும் போக்கு கடந்த ஓரு மாதமாகவே தொடர்ந்து வந்திருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சைகள் என 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 52 இடங்களில் வைக்கப்பட்டுள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் பெரிய அளவில் மோதல் இல்லை. ஆனால், இதுவரை பெண்கள் அதிகளவில் வாக்களித்திருக்கிறார்கள்.

தாமதாக வாக்களிக்க சென்றால் கூடுதல் பணம் தருகிறார்கள் என்று நேற்று கிளப்பி விடப்பட்ட புரளியால் பல இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாக இருக்கிறது என்கிறார்கள். மாலை நேரத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பான கட்டத்தை எட்டும். எனினும், எதிர்பார்த்தது போல் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பில்லை என்று களத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலை ஆறு மணி வரை நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவில் 70 சதவீதத்தை தாண்டினாலே அபூர்வம் என்கிறார்கள். 2 லட்சத்து 27 ஆயிரத்து வாக்காளர்களில் 60 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லையென்றால் எந்தவொரு கட்சியாலும் ஒரு லட்சம் வாக்கை பெற முடியாமல் போகும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பும் சமபலத்தில் இருப்பதால் இருவரும் குறைந்தபட்சம் 60 ஆயிரம் வாக்குகளை பெற்றுவிடுவார்கள்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றால் மட்டுமே இரு தரப்பிற்கும் இடையே கணிசமான வாக்கு வித்தியாசங்கள் ஏற்படும். இல்லாவிட்டால் ஆறாயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற வேண்டியிருக்கும்.

கடந்த ஒரு மாதத்தில் 30 அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டிருந்தார்கள். முதல்வர் ஒரு நாள் வந்து பிரச்சாரம் செய்யவேண்டியிருந்தது. எதிர்க்கட்சி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் பலர் தொகுதியில் தேர்தல் பணியில் இருந்தார்கள். முன்னாள் முதல்வர் எடப்பாடி, ஐந்து நாட்கள் பிரச்சாரம் செய்தார். இத்தனை கோடிகளை செலவு செய்தும், ஒரு லட்சம் வாக்குகள் கூட பெறமுடியவில்லையே என்கிற ஆதங்கம் இரு தரப்பிற்கும் வரக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com