சட்டப் பேரவைக்குள் நுழைந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
ஈரோடு சட்டமன்ற இடை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திருமகன் ஈவெரா வின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றிருந்த ஈ வி கே எஸ் இளங்கோவன் தேர்தல் ஆணையத்திடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுள்ள அவர், அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொறுப்பேற்பதற்கு முன்பாக, சட்டப்பேரவையில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அறையில் அவரது மகன் திருமகன் ஈவேராவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த ஜனவரி 4-ம் தேதி திடீரென உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அறையில், சபாநாயகர் அப்பாவு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 1984-ம் ஆண்டுக்குப் பின்னர் 2-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், 34 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்நாடு சட்டப் பேரவைக்குள் நுழைந்தார். ஈரோடு தொகுதிக்கு கடந்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியான போது அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,233 வாக்குகள் அதிகம் பெற்று ஈ .வி .கே .எஸ் இளங்கோவன் இமாலய வெற்றியினை பெற்றிருந்தார்.