அயோத்தி பற்றி பேசாமல் மக்களை நேரில் சந்தியுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயம் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்களை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் என்று பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கு உத்தரப்பிரதேசம், பிராஜ் மற்றும் கான்பூர்-பந்தல் கண்ட் பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், அயோத்தி ஸ்ரீராமர் ஆலயம் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், உள்ளுர் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு தீர்வுகாணுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சில இடங்களில் மக்கள் நம்மீது கோபமாக இருக்கலாம். ஆனால், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்களை சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தி அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். சுயநலம் இல்லாமல் மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியினர் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி ஒரு உதாரணத்தை குறிப்பிட்டார். பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த தேர்தலில் பா.ஜ.க.வைவிட குறைவான இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கும் வகையில் முதல்வர் பதவியை பா.ஜ.க. அவருக்கு விட்டுக்கொடுத்தது. ஆனாலும் அவர் கூட்டணியை முறித்துக் கொண்டு எதிரணியில் சேர்ந்துவிட்டார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேபோல பஞ்சாபில் அகாலிதளம் ஆட்சியில் இருந்தபோது தேசிய ஜனநாயக கூட்டணி துணை முதல்வர் பதவி எதையும் கோரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் 430 எம்.பி.க்களை 11 குழுக்களாக பிரித்து பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி வருகிறார். இந்த நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.

புதன்கிழமை நடைபெறும் அடுத்த கூட்டத்தில் அவர் தெலங்கானா, ஆந்திரம், தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்திவு பகுதிகளைச் சேர்ந்த 96 எம்.பி.க்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com