தென்னிந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக.... இணைய வழியில் வேட்புமனுத் தாக்கல்!
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 13-ந் தேதி தொடங்கி ஒரு வாரம் வரை நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும், ஜனதாளமும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
பா.ஜ. க வேட்பாளர் பட்டியல் தயாராக இன்னும் ஒரு வாரம் ஆகும் என்கிறார்கள். வேட்பாளர்கள் தேர்வு குறித்து கர்நாடக மாநில பா.ஜ.க நிர்வாகிகள் இடையே ஒருமித்த முடிவுக்கு வரமுடியவில்லை. கடந்த மூன்று நாட்களாக பெங்களூரில் ஆலோசனைக்கூட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கருத்து மோதல்கள் தொடர்வதால் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிகிறது.
வேட்பாளர் பட்டியலே தயார் செய்வதிலேயே ஏகப்பட்ட குழப்பம் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் ஏகப்பட்ட வேடிக்கையை எதிர்பார்க்கலாம். ஆனால், இம்முறை வேட்பு மனுத்தாக்கலை இணைய வழியில் செய்யமுடியும் என்று கர்நாடகா மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. விதம் விதமான வாகனகங்களில் வேட்பாளர்கள் வந்திறங்குவதும், கூட்டணிக்கட்சியினர் புடைசூழ வேட்புமனுத்தாக்கல் செய்யும் காட்சிகளையும் இனி பார்க்க முடியாது.
தென்னிந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக இணையவழியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாட்டிலேயே முதல் முறையாக குஜராத்தில் இணைய வழி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் இணையம் மூலமாக வேட்புமனுத்தாக்கல் பெறப்பட்டு, ஒப்புகை பெறப்பட்டது.
குஜராத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் வேட்புமனுத்தாக்கலை இணையவழியில் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 'வெப் போர்டு' மூலமாக டெபாசிட் தொகையை செலுத்தவேண்டும். பின்னர், கர்நாடக தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ இணையத்தளமான 'சுவிதா' இணையதளம் மூலமாக மனுத்தாக்கல் செய்யலாம்.
சுவிதா இணையத்தளம் தற்போது கன்னட மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் தெரிவு செய்து படிக்க முடியும். நடைபெறவிருக்கும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் இங்கே
இடம்பெற்றுள்ளன. வாக்களர் பட்டியல் முதல் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதி குறித்த அனைத்து விபரங்களையும் இணையத்தளத்தில் காண முடிகிறது.
சுவிதா இணையத்தளத்தில் ஆவணங்களை சமர்ப்பித்துவீட்டு, வேட்புமனுத்தாக்கல் செய்ததாற்கான நகல் காப்பியை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இணைய வழியில் சமர்ப்பிக்கப்படுவதால் ஏதாவது முக்கியமான ஆவணம் இணைக்கப்படால் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால், கடைசி நேரத்தில் வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். நல்ல மாற்றம்தான்!