உருவானது, அ.தி.மு.க 3.0! எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு!

உருவானது, அ.தி.மு.க 3.0! எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு!

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கடந்த ஓராண்டாக மோதல் இருந்து வந்தது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, ஓ.பன்னீர்செல்வம் சட்டப்போராட்டத்தை கையிலெடுத்தார். ஆனாலும், நீதிமன்ற தீர்ப்புகள் எடப்பாடிக்கு சாதகமாக இருந்தன.

கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரானார். பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு முறைப்படி பொதுச்செயலாளராகவும் ஆனார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இமெயில் மற்றும் தபால் மூலம் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர், தலைமை தேர்தல் அதிகாரி என அனைவருக்கும் ஆவணங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.

தேர்தல் ஆணையத்திடமிருந்து உடனே பதில் வராத காரணத்தால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இது குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையம் பத்து நாள் அவகாசம் கேட்டது.

இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் கட்சியின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்றுக்கொள்வதாகவும் தேர்தல் ஆணையம் தன்னுடைய கடிதத்தில் தெரிவித்திருக்கிறது. .

அ.தி. மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கர்நாடக தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னமும் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில்தான் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்குப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. ஒருவேளை ஓ.பி.எஸ் தரப்பிற்கு சாதகமாக இருந்தால் தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com