காங்கிரஸ் தலைவர் கார்கேவை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் காந்தி குடும்பத்தினர்தான் - பிரதமர் மோடி கிண்டல்!
காங்கிரஸ் தலைவர் கார்கேயை இயக்குபவர்கள் காந்தி குடும்பத்தினர்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என்பது உண்மைதான். நாடாளுமன்றத்தில் சிறப்பாக உரையாற்றக்கூடியவர். பொதுவாழ்வில் அவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவரை இயக்குபவர்கள் காந்தி குடும்பத்தினர்தான் என்றார் பிரதமர் மோடி.
கர்நாடக மாநிலம், பெலகாவில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது.
பாவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு குடைபிடிக்கூட ஆளில்லை. அவர் வெயிலில் காய்கிறார். ஆனால், அவருக்கு பக்கத்தில் இருப்பவருக்கு குடைபிடிக்கப்படுகிறது.
கார்கே சிறந்த அரசியல்வாதி. நாடாளுமன்றம், சட்டப்பேரவை என அவருக்கு 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் உள்ளது. மக்களுக்குக்காக சேவையாற்றி வரும் மூத்த தலைவரான கார்கேவுக்கு குடைகூட பிடிக்க ஆளில்லை. இதிலிருந்தே யாருடையை கட்டுப்பாட்டில் அவர் இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அவரை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல் காந்தி குடும்பத்தினர்தான்.
கர்நாடகத்தையும், கர்நாடகத்தைச் சேர்ந்த தலைவர்களையும் காங்கிரஸ் அவமதித்து வருகிறது. இதுதான் காங்கிரசின் கலாசாரம். இதற்கு முன்னர் நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல் ஆகியோரை எப்படி காங்கிரஸ் நடத்தியது என்பது அனைவருக்கும் தெரியும்.
மோடி இருக்கும்வரை தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது காங்கிரஸாருக்கு தெரியும். அதனால்தான் அவர்கள் மோடி சாக வேண்டும். மோடி சாகவேண்டும் என்கிறார்கள். மோடிக்கு சவக்குழி தோண்டப்பட்டு வருவதாக கூறுகிறார்கள். ஆனால், நாட்டு மக்களோ, மோடி ஆளவேண்டும், தாமரை மலர வேண்டும் என்கின்றனர்.
காங்கிரஸிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் (இரட்டை இன்ஜின்) ஏற்படும் நன்மைகளை விளக்கினார்.