கள்ளச்சாராய விவகாரம்: ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி-விஷம அரசியல் என தி.மு.க விமர்சனம்!
கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அ.தி.மு.க சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 22ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பா.ஜ.க தரப்பில் சென்னையில் ஆட்சியர் அலுவலகம் அருகே பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் விஷச் சாராயத்தை முன்வைத்து அ.தி.மு.கவினர் விஷம அரசியல் செய்து வருவதாக தி.மு.க கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. விஷம அரசியல் என்னும் பெயரில் முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு பதிலடியாக சில விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக 55 ஆயிரம் பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளித்துள்ள முரசொலி கட்டுரை, அ.தி.மு.க ஆட்சியில் நடந்த விஷயங்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
2001ல் ஜெயலலிதா ஆட்சியில் பண்ருட்டியில் கள்ளச் சாராயத்திற்கு 52 பேர் பலியானார்கள். 30 பேரின் பார்வை பறிபோனது. எடப்பாடியின் விமர்சனங்கள் ஜெயலலிதாவின் அரசுக்கும் பொருந்துமா என்று கேள்வி எழுப்பியுள்ள கட்டுரை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி முன்னரே தெரிந்தும் டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று பதிலளித்த எடப்பாடி, 13 பேர் படுகொலைக்கு பொறுப்பேற்று இருக்க வேண்டும்.
தேசிய குற்றப் பதிவேடு ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் கொலைகள் அதிகமாக நடந்த மாநிலங்களில் பட்டியலில் 6வது இடத்தை தமிழகம் பெற்றது. கொலைகள் அதிகம் நடந்த மாநகரங்களில் நான்காவது இடத்தை சென்னை பெற்றது. இவையெல்லாம் எடப்பாடி ஆட்சியில் இருந்தபோது நடந்தவை.
கொலை கொள்ளை விஷயங்களில் டாப் 5 இடத்தில் தமிழகத்தை கொண்டு போய் நிறுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. பொதுமக்கள் மீது சட்டவிரோதமாக வழக்கு பதிவு செய்ததில் தமிழ்நாடு 4வது மாநிலமாக இருந்தது. பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான கொலைகள் நடக்கும் மாநிலத்தில் 4வது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் 8 வது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. தற்கொலைகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது என்று ஒரு பெரிய பட்டியலை பகிர்ந்திருக்கிறது.
அதெல்லாம் சரி. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை ஏன் தெரிவிக்க மறந்துவிட்டார்கள்? எடப்பாடியின் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் என்றோ வெளியான என்.சி.ஆர்.பி அறிக்கையை முன்வைத்து தி.மு.க அரசியல் செய்வது வேடிக்கையாக இருக்கிறது என்கிறது லாயிட்ஸ் ரோடு வட்டாரம்.