பொது சிவில் சட்டம், 10 லட்சம் பேருக்கு வேலை கர்நாடகத்தில் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!

பொது சிவில் சட்டம், 10 லட்சம் பேருக்கு வேலை கர்நாடகத்தில் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!

கர்நாடகத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க.வும் இழந்த ஆட்சியை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இது தவிர முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளன. என்றாலும் இங்கு மும்முனைப் போட்டிதான் நிலவுகிறது.

இந்த நிலையில் மாநிலத்தில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஏழைகளுக்கு ஆண்டுக்கு 3 எல்.பி.ஜி. சிலிண்டர்கள் இலவசம் என பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை,

கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எடியூரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பேசிய ஜே.பி.நட்டா, அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக முஸ்லிம்களுக்கான சட்டவிரோத இடஒதுக்கீடு கைவிடப்படுவதாக முதல்வர் பொம்மை தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயத்தில் லிங்காயத்துகளுக்கும் வொக்கலிக இன மக்களுக்கு இடஒதுக்கீடு பிரித்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் என்றார்.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்துச் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் அறிவித்துள்ளன.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் உயர்நிலைக்குழு அறிக்கை பரிந்துரையின் பேரில் மாநிலத்தில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழ உள்ள ஏழைகளுக்கு ஆண்டுக்கு மூன்று எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கப்படும். யுகாதி, கணேஷ் சதுர்த்தி மற்றும் தீபாவளியின்போது இவை வழங்கப்படும். ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்களுக்கான டெபாசிட் திட்டமும் செயல்படுத்தப்படும். கர்நாடகம் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் கேந்திரமாக உருவாக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.30,000 கோடியில் குளிர்பதன கிடங்குகள் வசதி ஏற்படுத்தப்படும் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் உணவு பதப்படுத்தும் தொழில் பிரிவு ஏற்படுத்தப்படும் நகராட்சி வார்டுகளில் மருத்துவ சுகாதார வசதி ஏற்படுத்தப்படும் என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

மேலும் கர்நாடகத்தை சுற்றுலா மையமாக மேம்படுத்தும் வகையில் ரூ.1,500 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும், வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும், ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ இலவசமாக அரிசி வழங்கப்படும்

என்று தெரிவித்து வந்தாலும் இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.

கன்னடியர்களுக்கு தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும், சிவில் மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான தேர்வுகளை கர்நாடகத்திலும் நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com