ஊழலிலிருந்து ஒதுங்கியிருங்கள்: கட்சியினருக்கு ராகுல் அறிவுரை!

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபவதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் ராகுல்காந்தி இருவரும் அறிவுரை கூறினர்.

ஊழல் இல்லாமல் இருப்பதுதான் நம்மை போட்டியாளரான பா.ஜ.க.விலிருந்து வேறுபடுத்திக் காட்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல்கள் அதிகரித்துவிட்டதாக புகார்கள் வருவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, இதுபோன்ற செயல்பாடுகளை கட்சி ஒருநாளும் பொறுத்துக் கொள்ளாது என்று குறிப்பிட்டார். ஊழல் புகார் காரணமாக ஒரு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது மற்றவர்கள் செயல்பாட்டை பாதிக்கும் என்றார் அவர்.

இந்திய மக்கள் மாற்றத்திற்காக ஏங்குகிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்பியதால்தான் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். வெளிப்படையான நிர்வாகம், அர்ப்பணிப்புள்ள அரசைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகுமாறு அனைத்து அமைச்சர்களையும் அவர் கேட்டுக் கொண்டார். அனைத்து உறுப்பினர்களும் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதில் சமரசத்துக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக கேரளாவைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் மேலிடம் தேர்தல் உத்திகளை வகுப்பதற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களை காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். மேலும் மாநிலத்தில் கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் வியூக கூட்டங்களை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com