டாஸ்மாக்கை நம்பி அரசு இல்லை; விரைவில் 500 கடைகளை இழுத்து மூடிவிடுவோம் - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

டாஸ்மாக்கை நம்பி அரசு இல்லை; விரைவில் 500 கடைகளை இழுத்து மூடிவிடுவோம் - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!
Published on

டாஸ்மாக் விற்பனையின் மூலம் வரும் வருமானத்தில் தமிழக அரசு நடப்பதாக கூறுவது தவறு. இதுவரை 96 டாஸ்மாக் கடைகளை மூடியிருப்பதாகவும், இன்னும் 500 கடைகள் விரைவில் மூடப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திக்கிறார்.

பொதுவிடங்களில் தங்கு தடையற்ற மதுபானம் பயன்படுத்துவதை அனுமதிக்கும் தமிழக அரசின் உத்தரவு, எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. 12 மணி நேர வேலை நேரம் குறித்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் மதுபானம் குறித்த அறிவிப்பு விஷயத்தை மென்மையாக அணுகி வருகின்றன.

பொதுமக்களிடம் எழுந்த எதிர்ப்பின் காரணமாக திருமண மண்டபங்களில் மதுபானங்கள் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார். எனினும் மதுபானம் பயன்பாட்டை அதிகரிக்கும் செயல்பாடுகளை அரசு ஊக்குவித்து வருவதாக டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி வந்தவர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

டாஸ்மாக், மதுபானம் குறித்து தொடர்ந்து எழுந்து வரும் எதிர்ப்புகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக டாஸ்மாக் தானியங்கி விற்பனை எந்திரம் தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கமளித்திருக்கிறார். மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது. சாலையிலோ, பொது இடங்களிலோ தானியங்கி எந்திரம் இருப்பது போல் எதிர்க்கட்சிகள் பேசி வருவது தவறு என்று பேசியிருக்கிறார்.

மால்களில் டாஸ்மாக் கடைகள் அமைப்பது அதிமுக ஆட்சியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. தானியங்கி எந்திரத்தையும் அ.தி.மு.க ஆட்சியிலயே கொண்டு வரப்பட்டுள்ளது. தானியங்கி மது விற்பனை இயந்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே கடை செயல்பட்டு வருகிறது.

மாலில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலம் 24 மணி நேரமும் மதுபானத்தை எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தானியங்கி இயந்திரம் மூலமாக மது விற்பனை நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே உள்ள மால்களில் உள்ள கடைகளில் மட்டுமே தானியங்கி மது வழங்கும் இயந்திரம் உள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2013, 2014, 2018 மற்றும் 2019-ல் திறக்கப்பட்ட மால் ஷாப்புகளில்தான் தானியங்கி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுகின்ற

இடங்களில் ஏ.டி.எம். எந்திரம் போல பொருத்தப்போகிறோம் என்ற பொய் செய்தியை மக்களிடத்திலே பரப்பியுள்ளார்கள். அதிக விலைக்கு விற்பதை தடுப்பதற்காகவும், டாஸ்மாக்கில் சீர்திருத்த நடவடிக்கையாகத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் ஏதோ மதுக்கடையே திறக்காத மாதிரியும், இந்த டாஸ்மாக் நிறுவனத்தையே நிறுத்தி வைத்துவிட்டு அரசு நிர்வாகம் நடத்தியதை போலவும் பேசுகிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆக இருந்தாலும் சரி என்றைக்காவது நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமோ அல்லது ஒரு தனி நபர் தீர்மானமோ கொடுத்தது உண்டா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சரிதான், ஒரு தீர்மானம் நிறைவேற்றக்கூடவா நேரமில்லை?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com