
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொன்னையில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்ட நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ”தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நேற்றுடன் காலாவதியானது. தற்போது மசோதாவுக்காவது ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார்” என்று தெரிவித்தார்.
தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த மாதம் 1-ந்தேதி கொண்டு வரப்பட்டது. அதன் படி, 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ந்தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.