சென்னையில் கலைஞர் பெயரில் பிரம்மாண்ட பன்னாட்டு அரங்கம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னையில் கலைஞர் பெயரில் பிரம்மாண்ட பன்னாட்டு அரங்கம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னையில் கலைஞர் நினைவாக பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 25 ஏக்கர் பரப்பளில் ஐயாயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்படும் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் எண்ணம், சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின்போது ஏற்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவராகவும் இருந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினி, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவராக விளங்கும் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் நாளை ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திமுக சார்பிலும் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ’கலைஞர் 100’ எனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிகான இலச்சினையை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

”நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம்தான் சென்னையில் மிகப்பெரிய பன்னாட்டு அரங்கமாக இருந்து வருகிறது. ஆண்டு முழுவதும் பல வர்த்தக கண்காட்சிகள் இங்கே நடத்தப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், அறிஞர்கள், வர்த்தகர்கள் வந்து செல்லக்கூடிய இடமாக கவனம் பெற்றுள்ளது. மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தக மேம்பாட்டு நிறுவனமான இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பால் (ITPO) உருவாக்கப்பட்டது.

11 ஆயிரம் சதர மீட்டர் பரப்பளவில், இரண்டாயிரம் பேர் பங்கேற்கும்படியான குளிரூட்டப்பட்ட அரங்குகளை கொண்டிருக்கும் சென்னை வர்த்தக மையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற வர்த்தக மையங்கள் தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் அமைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்துவருகிறது.

இந்நிலையில் உலகத் தரத்தில் சென்னையில் ஒரு பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படவிருப்பதாக இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 25 ஏக்கர் பரப்பளவில் 5000 பேர் ஒரே நேரத்தில் பங்கேற்கும்படியான உலகத்தரமான பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர், அங்கிருந்த அரங்கங்களை பார்க்கும்போது இப்படியொரு எண்ணம் தோன்றியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கலைஞர் நினைவாக உருவாக இருக்கும் பன்னாட்டு அரங்கத்தில் உலகளாவிய மாநாடுகள், திரைப்படவிழாக்கள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்படும். சென்னையின் மிகப்பிரம்மாண்டமான உள்ளரங்கமாக பன்னாட்டு அரங்கம் உருவாக இருக்கிறது” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com