தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்த முயன்றால் கடும் நடவடிக்கை: சரத்பவார் எச்சரிக்கை!

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்த முயன்றால் கடும் நடவடிக்கை: சரத்பவார் எச்சரிக்கை!

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சரத்பவாரின் நெருங்கிய உறவினருமான அஜீத் பவார், பா.ஜ.க.வுடன் புதிய கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போது அங்கு சிவசேனை – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் துணைத்தலைவர் கடந்த ஆண்டு இவர்கள் 16 பேரையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்குமானால் பா.ஜ.க.- சிவசேனை கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ஜ.க. கூட்டணியில் இணைய அஜீத் பவார் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் மூலம் முதல்வர் பதவிக்கு அவர் குறிவைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களில் கணிசமானவர்களின் ஆதரவு அஜீத் பவாருக்கு இருப்பதால் அவர், கட்சியில் பிளவை ஏற்படுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், “கட்சியிலிருந்து யாராவது வெளியேற விரும்பினால் அது அவர்களின் விருப்பமாகும். ஆனால், கட்சியை பிளவுபடுத்த முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

2024 இல் நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மீண்டும் கூட்டாக போட்டியிடுமா என்று கேட்டதற்கு, “நாங்கள் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், எங்கள் விருப்பம் மட்டுமே போதுமானதாக இருக்க முடியாது. தொகுப்பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவை குறித்து இன்னும் விவாதிக்கப்படவே இல்லை. எனவே இது பற்றி நான் இப்போது கருத்துக்கூற முடியாது என்று சரத் பவார் தெரிவித்தார்.

இதனிடையே சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவு செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரெளத், மகா விகாஸ் கூட்டணி தொடரும். வரும் 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்

நாங்கள் இணைந்தே தேர்தலை எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

மகா விகாஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் நீட்டிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர் பவன்குலே கருத்து தெரிவிக்கையில், மக்களால் கைவிடப்பட்ட நிலையில் உத்தவ் தாக்கரேயால், மகா விகாஸ் கூட்டணியை வழிநடத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். உண்மைநிலையை அதாவது மகா விகாஸ் கூட்டணி நீடிக்குமா என்பதை சரத் பவார் விரைவில் புரிந்துகொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com